சென்னை: பகலில் செக்யூரிட்டி; இரவில் சைக்கிள் திருடன் – வடமாநில இளைஞரின் அதிர்ச்சிப் பின்னணி – Vikatan

சென்னைச் செய்திகள்

இது குறித்து திருவான்மியூர் போலீஸார் கூறுகையில், “திருவான்மியூர் பகுதியில் விலையுயர்ந்த சைக்கிள்களைத் திருடும் இளைஞரைத் தேடிவந்த நிலையில் சைக்கிளைத் திருடிக்கொண்டு செல்லும் வழியில் ஒடிசாவைச் சேர்ந்த ஜெகநாத் (22) என்ற இளைஞர் எங்களிடம் சிக்கிக்கொண்டார். இவர், திருவான்மியூர், சீனிவாசநகர் 3-வது குறுக்குத் தெருவில் குடியிருந்துவருகிறார்.

பெருங்குடியிலுள்ள தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்துவருகிறார். இரவு நேரங்களில் விலையுயர்ந்த சைக்கிள்களைத் திருடி விற்றுவந்திருக்கிறார். அவரிடமிருந்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒன்பது சைக்கிள்களைப் பறிமுதல் செய்திருக்கிறோம். ஜெகநாத் அளித்த தகவலின்படி பறிமுதல் செய்யபட்ட சைக்கிள்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கவிருக்கிறோம்” என்றனர்.

போலீஸ் உயரதிகாரி ஒருவர், `சைக்கிள் திருட்டுப் போனால் பலர் காவல் நிலையங்களில் புகார் கொடுப்பதில்லை. மேலும் சைக்கிள்களைத் திருடினால், அதை விற்பதிலும் சிக்கல்கள் இல்லை. அதனால்தான், சென்னையில் விலையுயர்ந்த சைக்கிள்களைக் குறிவைத்து ஒரு கும்பல் திருடிவருகிறது’ என்றார்.

ஜெகநாதன் போலீஸாரிடம், “எனக்கு மாதம் 8,000 ரூபாய்தான் சம்பளம். அதனால்தான் சைக்கிள்களைத் திருடினேன். விலையுயர்ந்த சைக்கிள்களைக்கூட 1,000 ரூபாய், 2,000 ரூபாய்க்கு விற்றேன்’’ என்று கூறியதாக போலீஸார் கூறினர். ஜெகநாத்தைக் கைதுசெய்த போலீஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-youth-in-cycle-theft-case