சென்னை, புறநகர் பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டம்: கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் விமரிசையாக நடைபெற்றன. கோயில்கள், தேவாலயங்களில் நேற்று அதிகாலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

2021 – ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 31-ம் தேதி இரவு 10 மணிக்கே போக்குவரத்து தடை செய்யப்பட்டது. வணிக வளாகங்கள், உணகங்களை இரவு 10 மணிக்குள் மூடவும் போலீஸார் அறிவுறுத்தினர். மெரினா, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் பொதுமக்கள் கூடுவதற்கும் போலீஸார் தடை விதித்தனர்.

வழக்கமாக, புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவு 12 மணி அளவில்இப்பகுதிகளில் வாண வேடிக்கைகள், இளைஞர்களின் உற்சாக குரல், வாழ்த்து கோஷங்கள் களைகட்டும். ஆனால், இந்த முறை மாநகர் மற்றும்புறநகர் பகுதிகள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது போல வெறிச்சோடி காணப்பட்டன.

அதேநேரம், பொதுமக்கள் அவரவர் வசிக்கும் தெருக்களில் பட்டாசுகளை வெடித்தும், கேக் வெட்டியும், ஆடல், பாடலுடன் உற்சாகமாக புத்தாண்டை வரவேற்று மகிழ்ந்தனர்.

சென்னையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், வடபழனி முருகன் கோயில், பெசன்ட்நகர் அஷ்டலட்சுமி கோயில், தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம், புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயில், சீனிவாசப் பெருமாள் கோயில், புறநகர் பகுதிகளில்உள்ள திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில், மாங்காடு காமாட்சியம்மன் கோயில் உட்பட அனைத்து கோயில்களிலும் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன. சிறப்பு மலர் அலங்காரங்களும் செய்யப்பட்டிருந்தன.

அனைத்து கோயில்களிலும் அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமிதரிசனம் செய்தனர். பல்வேறு கோயில்களில் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. கொடையாளர்கள் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

தேவாயலங்களில் சிறப்பு திருப்பலி

கிறிஸ்தவ தேவாலயங்களில் 31-ம் தேதி நள்ளிரவு சிறப்பு திருப்பலியும், சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றன. சென்னை சாந்தோம் பேராலயத்தில் சென்னை மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் நள்ளிரவு 11.30 மணி அளவில் சிறப்பு திருப்பலியும், புத்தாண்டு ஆராதனையும் நடந்தன. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.

பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலம், மயிலாப்பூர் பிரகாச மாதா ஆலயம் (லஸ் சர்ச்), ராயப்பேட்டை காணிக்கை அன்னை ஆலயம், எழும்பூர் திரு இருதய ஆண்டவர் திருத்தலம், புதுப்பேட்டை புனித அந்தோணியார் ஆலயம், பாரிமுனை தூய மரியன்னை இணை பேராலயம், புறநகர் பகுதிகளில் பரங்கிமலை புனித தோமையார் ஆலயம் உள்ளிட்ட கத்தோலிக்க தேவாலயங்களிலும் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது.

மறைமலை நகர் தூய விண்ணரசி அன்னை ஆலயத்தில் பங்குத் தந்தை பவுல்ஜான் தலைமையில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/618080-new-year-special-prayers.html