பொங்கல் பரிசு டோக்கனில் கட்சி தலைவர் படங்கள் இருக்க கூடாது: சென்னை ஹைகோர்ட் உத்தரவு – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: அரசு வழங்கும் பொங்கல் பரிசு டோக்கன்களில் எந்த ஒரு கட்சி தலைவரின் படங்களும் இடம்பெறக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொங்கல் பரிசு தொகையாக அரிசி அட்டைத்தாரர்களுக்கு 2500 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இன்று முதல் பரிசு தொகை பெறுவதற்கான டோக்கன்கள் வழங்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த டோக்கனில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்களின் படங்கள் மற்றும் அதிமுக கட்சியின் சின்னம் இடம் பெற்றுள்ளது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனு தாக்கல் செய்துள்ளார். அதில், மக்கள் வரிப்பணத்த்தில் அரசு சார்பில் செயல்படுத்தப்படும் இந்த பொங்கல் பரிசு தொகை திட்டத்தில் வழங்கப்படும் டோக்கன் மூலமாக அதிமுக கட்சியினர் சுய விளம்பரம் தேடி கொள்வது தேர்தல் ஆணைய அறிவிப்பாணைக்கு எதிரானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த டோக்கன்கள் ஆளும்கட்சியினர் மூலமாக வழங்கப்படுவதால் அனைத்து பயனாளிகளுக்கும் இந்த பரிசு தொகை போய் சேராது எனவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையின்போது, திமுக அமைப்புச் செயலாளர் எஸ் பாரதி சார்பாக மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி வாதிட்டார்

imageநெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் இடியுடன் கூடிய கனமழை – பொங்கல் வரைக்கும் மழை வெளுக்கப் போகுது

அப்போது அரசு சார்பாக ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் தமிழகத்தில் இரு இடங்களில் மட்டுமே அதிமுக தலைவர்களின் படங்கள் இடம்பெற்ற டோக்கன் விநியோகிக்கப்பட்டதாகவும், கட்சியினர் ஆர்வ மிகுதியால் வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார். தமிழகத்தின் மற்ற அனைத்து இடங்களிலும் அரசின் அதிகாரப்பூர்வ டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும் பொங்கல் பரிசுக்கான அதிகாரபூர்வ டோக்கன்களுக்கு மட்டுமே பரிசுப்பொருள் மற்றும் பரிசுத்தொகை வழங்க வேண்டுமென ரேசன் கடைகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பேனர்ஜி அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.. அப்போது தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட சுற்றறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.. அதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் அரசு வழங்கும் டோக்கன்களில் எந்த ஒரு கட்சி தலைவர்களின் படங்களும் இடம்பெறக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளனர்.

Source: https://tamil.oneindia.com/news/chennai/pongal-gift-tokens-issued-by-the-government-shouldn-t-feature-pictures-high-court-407912.html