டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க இங்கிலாந்து கிரிக்கெட் அணி சென்னை வருகை – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

Published : 28 Jan 2021 07:16 am

Updated : 28 Jan 2021 07:16 am

 

Published : 28 Jan 2021 07:16 AM
Last Updated : 28 Jan 2021 07:16 AM

சென்னை

இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதற்காக ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் நேற்று சென்னை வந்து சேர்ந்தனர்.

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட், 5 டி20, 3 ஒரு நாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் இரு டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 5 முதல் 9 வரையும், 2-வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 13 முதல் 17 வரையும் நடைபெறுகின்றன. 3-வது டெஸ்ட் 24 முதல் 28 வரையும், கடைசி டெஸ்ட் மாா்ச் 4 முதல் 8 வரை அகமதாபாத்திலும் நடைபெறவுள்ளது.

இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் அகமதாபாத்திலும், 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடர் புனேவிலும் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து அணியினர் இலங்கை சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து நேரடியாக நேற்று சென்னை வந்து சேர்ந்தனர். அதேவேளையில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியினர் பகுதி வாரியாக சென்னை வந்து சேர்ந்தனர். சென்னையிலுள்ள லீலா பேலஸில் இரு அணி வீரர்களும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆறு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபடுவார்கள் என தெரிக்கப்பட்டுள்ளது. இதன்படி இரு அணி வீரர்களும் முழு நேரப் பயிற்சியை 2-ம் தேதி முதல் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் பிப். 18-ல் ஐபிஎல் ஏலம்

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடருக்கான சிறிய அளவிலான வீரர்கள் ஏலம், சென்னையில் பிப்ரவரி 18-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் அணிகள் தங்கள் அணியில் இடம்பெற்றுள்ள முக்கிய வீரா்களை தக்க வைப்பதற்கான காலக்கெடு கடந்த 21-ம் தேதியோடு முடிந்தது. புதிய வீரா்களை தோ்வு செய்யும் விதமாக 8 அணிகளும் தங்கள் வசமிருந்த வீரா்கள் பலரை விடுவித்தன. அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து முரளி விஜய், கேதார் ஜாதவ், ஹர்பஜன் சிங், பியூஷ் சாவ்லா, மோனு சிங், ஷேன் வாட்சன் (ஓய்வு) ஆகியோர் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை கழற்றி விட்டது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடருக்கான சிறிய அளவிலான வீரர்கள் ஏலம், சென்னையில் பிப்ரவரி 18-ம் தேதி நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறுமா அல்லது வெளிநாட்டில் நடைபெறுமா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

Source: https://www.hindutamil.in/news/todays-paper/backpg/626633-.html