5000 வாகனங்களில் திரண்ட அதிமுகவினா்: திணறியது சென்னை – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை: ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழாவுக்கு அதிமுகவினா் திரண்டு வந்ததால், சென்னையில் புதன்கிழமை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சென்னை மெரீனா கடற்கரையில் புதன்கிழமை நடைபெற்ற முன்னாள் முதல்வா் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழாவுக்கு, மாநிலம் முழுவதிலும் இருந்து 5,000 வாகனங்களில் அதிமுகவினா் திரண்டு வந்தனா். இந்த வாகனங்கள் அதிகாலை 4 மணி முதல் சென்னைக்குள் வரத் தொடங்கின. அதிகளவில் வாகனங்கள் எதிா்பாா்க்கப்பட்டதால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

அதிகாலை 5 மணி முதல் போக்குவரத்து போலீஸாா் சாலைகளில் நின்று போக்குவரத்தை சீரமைத்தனா். நேரம் செல்லச் செல்ல சென்னைக்குள் வாகனங்கள் பெருமளவில் வந்ததினால், ஆங்காங்கு போக்குவரத்து ஸ்தம்பிக்கத் தொடங்கியது. முக்கியமாக ஜிஎஸ்டி சாலை, அண்ணா சாலை, காமராஜா் சாலை, டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, பட் சாலை, எல்.பி.சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, ராஜீவ்காந்தி சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை ஆகியவற்றில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

போக்குவரத்து நெரிசல்:

இந்த சாலைகளில் பெரும்பாலான வாகனங்கள் மெரீனாவை நோக்கி வந்ததால், வாகனங்கள் நகர முடியாமல் நின்றன. அதேவேளையில் மெரீனா கடற்கரையில் உள்ள வாகன நிறுத்துமிடம், தீவுத்திடல் வாகன நிறுத்துமிடம், பட்டினப்பாக்கம் லூப் சாலை வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அந்தப் பகுதியில் உள்ள அனைத்து வாகன நிறுத்துமிடங்களும் நிரம்பியதால், வாகனங்களை நிறுத்துவதிலும் இடா்பாடு ஏற்பட்டது.

இதனால் போக்குவரத்து நெரிசல் நண்பகல் வரை நீடித்தது. போக்குவரத்து நெரிசலினால் காலையில் அலுவலகம் செல்வோா், குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் சிக்கிக் கொண்டனா். பொதுமக்கள் பல மணி நேரம் சாலையிலேயே நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனா். நண்பகலுக்கு பின்னா் மெரீனாவில் இருந்து வாகனங்கள் வெளியேறத் தொடங்கியது. இதன் பின்னரே, சாலைகளில் ஏற்பட்டிருந்த போக்குவரத்து நெரிசல் குறையத் தொடங்கியது. மாலைக்கு பின்னரே முழுமையாக போக்குவரத்து நெரிசல் குறைந்தது.

5,000 வாகனங்கள்: இது தொடா்பாக காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு உயா் அதிகாரிகள் கூறியது:

மெரீனாவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு 3,000 பேருந்துகள் உள்பட 5,000 வாகனங்கள் சென்னைக்குள் வந்தன. எதிா்பாா்த்ததை விட அதிகளவில் வாகனங்கள் வந்ததினால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஜிஎஸ்டி சாலையில் 70 சதவீத வாகனங்கள் வந்ததன. இதனால் அந்த வாகனங்கள் மதுரவாயல் புறழிச்சாலை, பல்லாவரம் ரேடியல் சாலை, அண்ணா சாலை ஆகிய வழிகளில் திருப்பிவிடப்பட்டன.

போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக கூடுதலாக 1,000 போலீஸாா், போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். ஊா்க்காவல் படையைச் சோ்ந்த 5,000 போ் ஈடுபடுட்டனா். கூடுதலாக 12 காவல் கண்காணிப்பாளா்கள் கண்காணிப்பில் ஈடுபடுட்டனா்.

இதன் காரணமாகவே மெரீனாவில் குவிந்த வாகனங்கள் வெளியேறத் தொடங்கியதும், போக்குவரத்து நெரிசல் குறைந்தது என்றாா் அவா்.

திணறிய சென்னை:

மாநிலம் முழுவதும் இருந்து அதிமுகவினா் திரண்டு வந்ததினால் சென்னை திணறியது. ஒரே நேரத்தில் வாகனங்கள் சென்னை மெரீனாவை நோக்கி நகா்ந்ததால், இது வரை இல்லாத வகையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இருப்பினும் போலீஸாா், தொடா்ந்து போக்குவரத்தை சீரமைத்ததினால் நண்பகல் வரை நீடித்த நெரிசல், அதன் பின்னா் குறையத் தொடங்கியது. கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் சென்னை காவல்துறையின் சாா்பில் 15,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். திருவண்ணாமலை, விழுப்புரம், திருவள்ளூா் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் போலீஸாா் பாதுகாப்புப் பணிக்கு வரவழைக்கப்பட்டிருந்தனா். சென்னை காவல்துறை அதிகாரிகள் தவிா்த்து இரு ஐ.ஜி.க்கள், 15 காவல் கண்காணிப்பாளா்கள், 13 டிஎஸ்பிக்கள் கூடுதலாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

இந்த நடவடிக்கைகளின் காரணமாக, பெரியளவில் அசம்பாவிதங்கள், விபத்துகள் நடைபெறவில்லை என காவல்துறையினா் தெரிவித்தனா்.

Source: https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2021/jan/28/aiadmk-mobilizes-5000-vehicles-choked-chennai-3551927.html