தவறாமல் வரி செலுத்துபவர்களை கவுரவிக்க சென்னை மாநகராட்சி முடிவு: மண்டல வாரியாக பாராட்டு சான்றிதழ் வழங்க திட்டம் – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னையில் தவறாமல் வரி செலுத்துபவர்களை கவுரவிக்க, மாநகராட்சி முடிவுசெய்துள்ளது. இதற்காக, மண்டல வாரியாக பட்டியல் தயாரித்து பாராட்டு சான்றிதழ் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு சொத்து வரி, நிறுவனங்களிடம் இருந்து தொழில் வரி உள்ளிட்டவை வசூலிக்கப்பட்டு வருகின்றன. 6 மாதங்களுக்கு ஒருமுறை வரி செலுத்த வேண்டும். சொத்து வரி, தொழில் வரி உள்ளிட்டவற்றை முறையாக செலுத்தாதவர்களுக்கு நோட்டீஸ் வழங்கி வரியை வசூல் செய்யும் பணிகளில் சென்னை மாநகராட்சியின் வருவாய் துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சொத்து வரி, தொழில் வரி உள்ளிட்டவற்றை தவறாமல் செலுத்துபவர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்க சென்னை மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்டபகுதிகளில் அதிகப்படியான சொத்துவரி செலுத்துபவர்களையும், தவறாமல்சொத்து வரி செலுத்துபவர்களையும் தேர்ந்தெடுத்து குடியரசு தின விழாவில் கவுரவித்தோம். இதன் தொடர்ச்சியாக, மண்டலவாரியாக சொத்து வரி, தொழில் வரி, வணிக உரிமங்களை தவறாமல் புதுப்பித்தல் உள்ளிட்டவை மேற்கொள்பவர்களின் பட்டியலை தயாரித்து நடப்பாண்டு சுதந்திர தினத்தன்று சென்னை மாநகராட்சி ஆணையரின் கையொப்பமிட்ட பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்க முடிவு செய்துள்ளோம்.

வரிகளை தவறாமல் செலுத்தும் பொதுமக்களை ஊக்கப்படுத்த வேண்டிய பொறுப்பு சென்னை மாநகராட்சிக்கு உள்ளது. இதை மனதில் வைத்துதான் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம், வரி தவறாமல் செலுத்த வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/627697-greater-chennai-corporation.html