முதல்வரின் வேண்டுகோளை ஏற்று பிரதமர் மோடி பிப்.14-ல் சென்னை வருகை?- பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதாக தகவல் – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

முதல்வர் பழனிசாமியின் வேண்டுகோளை ஏற்று, பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கி வைக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 14-ம் தேதி சென்னை வர உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தின் பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி, நிதி கோருவது தொடர்பாக டெல்லி சென்ற முதல்வர் பழனிசாமி கடந்த 19-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, ‘‘காவிரி – குண்டாறு இணைப்பு, கல்லணை சீரமைப்பு, பவானி ஆற்றை நவீனப்படுத்தும் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ வரையிலான மெட்ரோ ரயில் சேவை, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தூத்துக்குடி எரிவாயு திட்டம் ஆகிய திட்டங்களின் தொடக்க விழாவுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தேன். அவரும் வருவதாக ஒப்புக்கொண்டுள்ளார்’’ என்று தெரிவித்திருந்தார்.

அதன்படி, பிப்ரவரி 14-ம் தேதி பிரதமர் மோடி சென்னை வர உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் நடைபெறும் விழாவில் பங்கேற்கும் அவர், பல்வேறு திட்டங்களை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்து உரையாற்ற இருப்பதாக கூறப்படுகிறது.

மதுரையில் நேற்று முன்தினம் நடந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, “வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து பாஜகபோட்டியிடும்’’ என்று அறிவித்தார். இதன்மூலம், அதிமுக – பாஜககூட்டணி உறுதியாகி உள்ளது.

முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் ஏற்கெனவே 2 கட்டங்களாக தமிழகத்தில் சுற்றுப் பயணம் செய்துள்ளார். இந்த சூழலில் பிரதமர் மோடியின் தமிழக வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இதுபற்றி தமிழக பாஜக தலைவர்களிடம் விசாரித்தபோது, “முதல்வர் பழனிசாமி மற்றும் தமிழக பாஜகவின் கோரிக்கையை ஏற்றுபிப்ரவரியில் பிரதமர் மோடி தமிழகம் வருவது உறுதி. அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளதால், அரசு நிகழ்ச்சிகளுக்காக தமிழகம் வந்தாலும் பிரச்சாரப் பொதுக் கூட்டத்திலும் பிரதமர் பங்கேற்பார். அதற்கான ஏற்பாடுகளை தமிழக பாஜக செய்து வருகிறது’’ என்றனர்.

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/628040-modi-chennai-visit.html