மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டரிங் கிளப் சார்பில் பாரம்பரிய வாகனங்களின் கண்காட்சி: பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளிப்பு – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டரிங் கிளப் சார்பாக, பாரம்பரிய வாகனங்களின் கண்காட்சி மற்றும் பேரணி சென்னையில் நேற்று நடைபெற்றது.

மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டரிங் கிளப் என்ற அமைப்பு, பாரம்பரிய வாகனங்களை பாதுகாப்பது, புதுப்பிப்பது, அவற்றை பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு வருவது ஆகிய பணிகளை செய்துவருகிறது. இந்த அமைப்பு மூலம் ஆண்டுதோறும் பாரம்பரிய வாகனங்களின் பேரணி சென்னையில் நடத்தப்படும். அதன்படி நடப்பாண்டுக்கான பாரம்பரிய வாகனங்களின் கண்காட்சி சென்னை அடையாறில் உள்ள பால வித்யா மந்திர் பள்ளியில் நேற்று காலை 8 முதல் 9.30 மணி வரை நடைபெற்றது. இதில் மொத்தம் 30 பாரம்பரிய கார்கள், 11 இருசக்கர வாகனங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

அதில் குறிப்பாக 1973-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட, ‘ஜாக்குவார் வி12 ரோட்சர்’ கார் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. அதேபோல், ஏவி மெய்யப்ப செட்டியார் பயன்படுத்திய `பிக் சூப்பர் 8′, 1934-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ‘ரோல்ஸ் ராய்ஸ்’, பென்ஸ் நிறுவனம் 1886-ல் முதன்முதலாக உருவாக்கிய பேடன்ட் கார், 1896-ம் ஆண்டு போர்ட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ‘குடரிக் சைக்கிள்’, ‘டாட்ஜ்’ வகை கார்கள், பியட் 1100 வகை கார்கள், அம்பாசிடர் கார்கள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.

கண்காட்சியில் பங்கேற்ற பொதுமக்கள் மற்றும் குழந்தைகள், கார்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இதையடுத்து சென்னையில் இருந்து மகாபலிபுரம் வரை அனைத்து கார்களும் பேரணியாக சென்றன. இந்த பேரணியை கவின்கேர் நிறுவனத் தலைவர் சி.கே.ரங்கநாதன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறும்போது, “ஒரே நேரத்தில் பல்வேறு பழமையான கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை பார்த்தது பிரமிப்பாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது’’என்றார்.

மதியம் 12 மணிக்கு மகாபலிபுரத்தை அடைந்த வாகனங்கள் அனைத்தும், கென்ஸ்பாம் கடற்கரையில் உள்ள வெல்கம் ஓட்டலில் மாலை 3 மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன.

இது தொடர்பாக மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டரிங் கிளப்பின் செயலாளர் எம்.எஸ்.குகன் கூறியதாவது:

வழக்கமாக கண்காட்சியில் 70-க்கும் அதிகமான வாகனங்கள் கலந்துகொள்ளும். ஆனால், கரோனா பரவல் காரணமாக பல்வேறு வாகனங்கள் சென்னைக்கு வரமுடியாத நிலை ஏற்பட்டது. எனினும், அடுத்தமுறை நடைபெறும் கண்காட்சியில் கூடுதல் வாகனங்களை ஒருங்கிணைக்க முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/627996-madras-heritage-motoring-club.html