அதிக அளவு மழை பெய்தும் சென்னையில் தண்ணீர் பஞ்சம் ஏற்படுவது ஏன்? – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்
Comprehensive Story

சென்னை: இந்திய மெட்ரோ நகரங்களில் ஒன்று.. ஆண்டுக்கு சராசரியாக 1400 மில்லி மீட்டர் மழை பெய்யக்கூடிய நகரம்.. அதாவது லண்டன் நகரத்தை விட இரண்டு மடங்கு அதிக அளவு, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தை விட நான்கு மடங்கு அதிக அளவுக்கு மழை பெய்யக்கூடிய நகரம்தான் சென்னை.

அப்படியிருந்தும், 2019ம் ஆண்டில் சென்னை நகரத்தில் நிலவிய குடிநீர் பஞ்சம் தலைப்பு செய்திகளில் அடிபட்டது. சென்னை நகர மக்களுக்கு ஒரு நாளைக்கு 10 மில்லியன் லிட்டர் அளவுக்கு குடிநீர் தேவைப்படுகிறது. ஆனால் சுத்தமாக சென்னையில் தண்ணீர் வறண்டு போய்க் காணப்பட்டது.

இவ்வளவு மழை பெய்தும், குடிக்கக்கூட தண்ணீர் இல்லாத நிலைமைக்கு சென்னை செல்வதற்கு காரணம் என்ன என்பதை அப்போது முதல் பலரும் ஆய்வுகள் செய்து வருகின்றனர்.

சர்வதேச செய்தி ஏஜென்சி நிறுவனம் புளூம்பர்க் அதில் ஒன்று. இது பற்றி செய்தி ஏஜென்சி கூறியுள்ள தகவலை பாருங்கள்: சென்னை ஒரு காலகட்டத்தில் மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டது. தென் கிழக்கு இந்தியாவில், வங்கக் கடலோரத்தில் சென்னை அமைந்துள்ளது. சென்னை நகரத்துக்குள் மூன்று நதிகள் ஓடிச்சென்று கடலில் கலக்கின்றன. ஆனால் அந்த மூன்றுமே மிகவும் மாசுபாடு அடைந்து காணப்படுகின்றன.

தென் இந்தியாவின் நுழைவு வாயில் எனுமளவுக்கு இணைப்பு புள்ளியாக இருக்கிறது சென்னை. பாரீஸ் நகரத்தை விட அதிகமான மக்கள் தொகை கொண்ட சென்னையில் கணிசமான மக்கள், ஆட்டோமொபைல், சுகாதார துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் சினிமா துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

சென்னைக்கு அதன் நிலவியல் அமைப்பு எப்படி ஒரு பலமோ, அதுவேதான் அதன் பலவீனமும். அவ்வப்போது புயல் தாக்க கூடிய நிலவியல் பகுதியில், சென்னை அமைந்துள்ளது. எனவே சில நேரங்களில் பெரிய அளவு மழை பெய்து நகரத்துக்குள் தண்ணீர் தேங்கி நிற்கிறது. சாக்கடை கால்வாய்களில் இருந்து தண்ணீர் வெளியே வந்துவிடுகிறது. தொடர்ந்து ஒரே மாதிரி இருப்பது கிடையாது. சில காலங்களில் மிக அதிக அளவும், சில காலங்களில் குறைவாகவும் மழை பெய்கிறது.

வடகிழக்கு பருவமழை காலகட்டத்தில்தான் சென்னையில் 90 சதவீதம் அளவுக்கு மழை பெய்கிறது. ஒருவேளை இந்த மழை பொழிவு குறைந்து விட்டால், ஒட்டுமொத்த வருடத்துக்கும் தேவையான தண்ணீருக்கு தொலை தூரங்களில் உள்ள ஏரிகள், குளங்களில் இருந்து தண்ணீர் எடுத்து வரப்படுகிறது, அல்லது கடல் நீர் குடி நீராக மாற்றப்படுகிறது. இவையெல்லாம் அந்த நகரத்துக்கு போதுமானதாக இல்லை.

அவங்க எல்லாம் விவசாயிகள் இல்ல… கொளுத்திப்போட்ட கங்கனா… பதிவுகளை தூக்கிய ட்விட்டர்

வானிலை மற்றும் சீரற்ற வானிலை தன்மை இவை ஒரு பக்கம் என்றால், நகரத்தின் மோசமான திட்டமிடல் மற்றொரு காரணமாகும். நகரம் பெரிதாக வளரும் நிலையில், ஏற்கனவே இருந்த ஏரிகளும், குளங்களும் மாயமாகி விட்டன. 1793 ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை 12.6 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு இருந்த சென்னையின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் வெறும் 3.2 சதுர கிலோமீட்டர் அளவுக்கு சுருங்கி விட்டன என்கிறது சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய ஒரு ஆய்வு. இதில் பல நீர்நிலைகள் கடந்த சில தசாப்த ஆண்டுகளில்தான் காணாமல் போனதாம்.

2008ல் புகழ்பெற்ற ஐடி காரிடார் கட்டமைக்கப்பட்டது. 250 சதுர கிலோமீட்டர் பரப்பில் இந்த ஐடி காரிடார் பரந்து விரிந்துள்ளது. 2030ம் ஆண்டுக்குள் சென்னை நகரத்தின் 60 சதவீத நிலத்தடி நீர் மோசமான அளவிற்கு போய்விடும் என்று அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆய்வு தெரிவிக்கிறது. 2015ம் ஆண்டு அந்த நூற்றாண்டிலேயே இல்லாத அளவுக்கு பெரிய மழை வெள்ளத்தை சென்னை சந்தித்தது.

வடகிழக்கு பருவமழை காலகட்டத்தில் ஒரே நாளில் 494 மில்லி மீட்டர் அளவுக்கு மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக மாநிலத்தில் 400க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். 1.8 மில்லியன் மக்கள் வெள்ளத்தின் காரணமாக வீடுகளில் இருந்து வெளியேறினர். ஐடி காரிடார் பகுதியில் வெள்ளநீர் இரண்டாவது தளம் வரை உயர்ந்தது. ஆனால், பிறகு, நான்கே ஆண்டுகள் கழித்து மறுபடியும் சென்னை நகரம் உலக அளவில் செய்தி ஊடகங்களில் இடம் பிடித்தது. ஆனால் கடுமையான வறட்சி காரணமாக இந்த முறை அந்த நகரம் செய்திகளில் அடிபட்டது. பூஜ்ஜியம் என்ற அளவுக்கு நிலத்தடி நீர்மட்டம் சென்றுவிட்டது.

சென்னையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் நித்யானந்த் ஜெயராமன் இது பற்றி கூறுகையில், வெள்ளம் மற்றும் வறட்சி ஆகிய இரண்டுக்கும் காரணம் ஒன்றுதான். நகர்மயமாதல், கட்டுமானங்கள் போன்றவை இயற்கையை சீண்டுவது தான் இதற்கு காரணம் என்று தெரிவித்துள்ளார்.

உலக வெப்பமயமாதல் தாக்கம் சென்னையில் பெரிதாக எதிரொலிப்பதுதான், இந்த வறட்சி மற்றும் தீவிர வெள்ளத்துக்கு காரணம் என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். சென்னையை சேர்ந்த லாப நோக்கமற்ற சுற்றுச்சூழல் அமைப்பைச் சேர்ந்த அருண் கிருஷ்ணமூர்த்தி என்பவர் இதுபற்றிக் கூறுகையில், பருவமழை காலம் முடிந்த பிறகு ஜனவரி மாதத்தில் இந்த வருடம் அதிக அளவுக்கு மழை பெய்துள்ளது. 10 மடங்கு அதிக மழை என்று சொல்கிறார்கள். எனது தாத்தா காலத்தில் அல்லது எனது பெற்றோர்கள் அல்லது நான் சிறுவனாக இருந்தபோது இதுபோல கேள்விப்பட்டதே கிடையாது. காலநிலை வித்தியாசமாக இருப்பதாக இங்கே உள்ள மக்கள் பேசுகிறார்கள். ஆனால் யாருமே உலக வெப்பமயமாதல் பற்றி பேசுவது கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

ரியோடி ஜெனிரோ, ஜகார்த்தா, கெய்ரோ, சா பவுலோ ஆகிய நகரங்கள் பலவும் தண்ணீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது. அதே போல சென்னையும் பாதிக்கப்பட்டுள்ளது. இது உலகளாவிய பிரச்சினை. 2003ஆம் ஆண்டு தமிழக அரசு நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக மழைநீர் சேகரிப்பு கட்டாயம் என்று சட்டம் கொண்டு வந்தது. இதன் பலனாக நிலத்தடி நீர்மட்டம் ஓரளவுக்கு உயர்ந்தது. ஆனால், தொடர்ந்து அவற்றை பராமரிக்காததால், தற்போது நிலத்தடி நீர் மட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு நிலவிய வறட்சிக்கு பிறகு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பங்களிப்புடன் மழைநீர் சேகரிப்பு மற்றும் தண்ணீர் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை கொண்டு வர ஆரம்பித்தார். பெருநகர் சென்னை மாநகராட்சி நகரத்திலுள்ள 1000 கோவில் குளங்களை தூர்வாரி பராமரிக்க திட்டம் வகுத்துள்ளது. பழைய காலத்தில் கோவிலை சுற்றி எப்படி குளங்கள் கட்டப்பட்டதோ, அதுபோல குளங்களை மீட்டெடுக்க வேண்டும் என்பது திட்டத்தின் அடிப்படை ஆகும். இவ்வாறு அந்த ஏஜென்சி ஆய்வுச் செய்தி தெரிவிக்கிறது.

மக்களின் பங்களிப்பு இருந்தால்தான் சென்னை நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த முடியும் என்பதுதான் இந்த செய்தித் தொகுப்பின் சாராம்சமாக இருக்கிறது.

Source: https://tamil.oneindia.com/how-chennai-ran-out-of-water-a-case-study-cs-411020.html