மூடிய வீட்டிற்குள் ஆணும் பெண்ணும் இருப்பது தவறல்ல – சென்னை ஹைகோர்ட் பரபரப்பு தீர்ப்பு – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: மூடப்பட்ட ஒரு அறையில் ஆணும், பெண்ணும் இருந்தால் அதை தவறல்ல என்றும் அதை வைத்து ஒருவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. கடந்த 1998ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் இப்போது தீர்ப்பளித்து சென்னை உயர்நீதிமன்றம்.

திருமணமாகாத ஆணும் பெண்ணும் லிவிங் டுகெதர் முறையில் சேர்ந்து வாழ்வது எப்படி குற்றமாக கருத முடியாதோ அதேபோல், இருவரும் ஒரே விடுதியில் ஒரே அறையில் தங்குவதும் குற்றமாகாது என்று ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பளித்துள்ளது. அதே போல இந்த வழக்கும் விசித்திரமானதுதான்.

கடந்த 1997ஆம் ஆண்டு, ஆயுதப்படை பிரிவில் சரவண பாபு என்பவர் கான்ஸ்டபிளாக சேர்ந்தார். கடந்த 1998ம் ஆண்டில் இவரது வீட்டிற்குள் அதே பகுதியில் வசித்து வந்த இன்னொரு பெண் காவலர் இருந்ததாகக் கூறி இருவரையும் அறைக்குள் வைத்து அந்த பகுதி மக்கள் பூட்டி விட்டனர்.

காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் பற்றி துறை ரீதியான விசாரணை நடைபெற்றது. சரவண பாபுவிற்கும் பெண் காவலருக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்ததாகக் கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் சரவண பாபு பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். ஆயுதப்பிரிவு ஐஜி பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

உயர் அதிகாரிகளின் நடவடிக்கையை எதிர்த்து சரவண பாபு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்தார். அதில், தனக்கும் பெண் காவலருக்கும் இடையே எந்த தகாத உறவும் இல்லை என்றும், தன்னுடைய வீட்டில் இருந்த அவரது வீட்டு சாவியை வாங்குவதற்காகவே அவர் வந்தார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அவர் தன்னுடைய வீட்டுக்கு வந்ததும் வீட்டு கதவை யாரோ வெளியில் இருந்து பூட்டி விட்டனர் என்றும் அவர் தன்னுடைய மனுவில் குறிப்பிட்டிருந்தார் சரவணபாபு.

பல ஆண்டுகாலமாக இந்த வழக்கு நடைபெற்றது. அப்போது சரவணபாபு ஆஜரான வழக்கறிஞர், சரவணபாபுவின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் தனது தோழியை பார்க்க வந்த பெண் காவலர், அவர் இல்லாததால், பக்கத்து வீட்டில் சாவியை கொடுத்துவிட்டு போனாரா என்பதை கேட்கவே சரவணபாபு வீட்டிற்கு வந்தார்.

imageபெட்ரூம் வரை உறவு.. கட்டிலுக்கு அடியில் கள்ள காதலன்.. லாரி ஏற்றியும், தூக்கிட்டும்.. பரிதாப காதல்கள்

இருவர் மீதும் களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த நேரத்தில் வேறு யாரோ ஒருவர் வெளியில் இருந்து வீட்டை பூட்டி விட்டனர். அதிகாரிகள் வந்த போது இதுகுறித்து விளக்கமளித்தும், அதனை பொருட்படுத்தாமல் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று வாதிட்டார்.

இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுரேஷ்குமார், “மனுதாரர் கூறுவதையே காவல்துறையினரின் சாட்சியங்களும் கூறுகின்றன. சரவண பாபுவும், சம்மந்தப்பட்ட பெண் காவலரும் தவறான நோக்கத்தில் தான் வீட்டுக்குள் இருந்தனர் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறினார்.

இருவரும் குறிப்பிட்ட நேரம் ஒரே வீட்டில் இருந்தனர் என்பதால், அவர்கள் தவறான நோக்கத்துடன் தான் இருந்தனர் என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே பணி நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிடுகிறேன். அவர் பணியில் சேர தகுதியானவர் என்று தெரிவித்தார்.

பூட்டப்பட்ட ஒரு அறையில் ஆணும், பெண்ணும் இருந்தால் அதை விபச்சாரமாகக் கருத முடியாது என்றார். சமூகத்தில் பல கருத்துக்கள் இருக்கலாம். அதை வைத்து யார் மீதும் ஒழுங்கு நடவடிக்கையோ, தண்டனையோ கொடுக்க முடியாது என்று நீதிபதி தன்னுடைய உத்தரவில் தெரிவித்துள்ளார். 23 ஆண்டுகள் நடைபெற்ற வழக்கில் பரபரப்பு தீர்ப்பளித்து சென்னை நீதிமன்றம்.

Source: https://tamil.oneindia.com/news/chennai/man-and-a-woman-in-a-closed-house-it-is-not-prostitution-high-court-verdict-411058.html