சசிகலா வருகை.. புதுக்கட்டுப்பாட்டை விதித்தது சென்னை மாநகராட்சி.. அதிர்ச்சியில் அமமுகவினர்! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: பெங்களூருவில் இருந்து நாளை சென்னைக்கு சசிகலா வருகை தர உள்ளார். இதையொட்டி அனுமதியின்றி அரசியல் கட்சிகள் பேனர் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரித்துள்ளார்.

சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வந்த சசிகலா கடந்த ஜனவரி 27ம் தேதி தண்டனை காலம் முடிந்து விடுதலையானார். ஆனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்,

அங்கு தீவிர சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்த சசிகலா, மருத்துவர்களின் அறிவுரைப்படி ஒரு வாரம் பெங்களூருவில உள்ள பண்ணை வீட்டில் ஒய்வில் இருக்கிறார். ஒரு வார தனிமை நேற்றுடன் முடிந்த நிலையில், நாளை 8ம் தேதி சசிகலா சென்னை வருகிறார்.

ஜெயலலிதா கார்

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் சசிகலா சென்னைக்கு வருவது பெரும் எதிர்பார்பை அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தி உள்ளது. அவர் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த போது அதிமுக கொடியையும், ஜெயலலிதாவின் காரையும் பயன்படுத்தியதால், அடுத்து சசிகலா என்ன செய்ய போகிறார் என்ற பரபரப்பு நிலவுகிறது.

அமமுக வரவேற்பு

இந்த சூழலில் நாளை சசிகலா சென்னை வரும் போது அவருக்கு தமிழகம் முழுவதிலிருந்தும் அமமுகவினர் வந்து உற்சாக வரவேற்பு கொடுக்க திட்டமிட்டுள்ளனர். ஓசூர் முதல் சென்னை வரை பெரும் வரவேற்புடன் சசிகலா வரவேற்க அமமுகவினர் இப்போதே வாடகை கார், வேன்களை புக்கிங் செய்துவிட்டார்கள்.

டிடிவி தினகரன்

சசிகலாவை வரவேற்கும் விதமாக தமிழகத்தின் பல இடங்களில் போஸ்டர்கள், பேனர்கள் வைக்கப்பட்டு வருகிறது. சசிகலாவுக்கு தமிழக-கர்நாடகா எல்லையில் இருந்து வழிநெடுக வரவேற்பு அளிக்கப்படும் என்று அ.ம.மு.க. பொதுசெயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவித்திருந்தார். அதன்படி சென்னையில் 12 இடங்களில் சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரகாஷ் எச்சரிக்கை

இந்நிலையில் சசிகலா வருகையை முன்னிட்டு சென்னையில் பேனர்கள் வைக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் அனுமதியின்றி அரசியல் கட்சிகள் பேனர் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த கட்டுப்பாடுகள் காரணமாக அமமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

Source: https://tamil.oneindia.com/news/chennai/sasikala-to-arrive-in-chennai-tomorrow-chennai-commissioner-prakash-warn-banners-issue-411281.html