சென்னை தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள இல்லத்திற்கு சசிகலா வருகை – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

பெங்களூருவிலிருந்து 23 மணி நேர பயணத்திற்கு பிறகு இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியாவின் இல்லத்திற்கு சசிகலா வந்து சேர்ந்தார்.

சென்னை,

சொத்து குவிப்பு வழக்கில் 2017 பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்ற சசிகலா, 2021 ஜனவரி 27 அன்று விடுதலை செய்யப்பட்டார். கொரோனா பாதிப்பு சிகிச்சை, பெங்களூரு ரிசார்ட்டில் தனிமைப்படுத்தல் ஆகியவற்றை முடித்துக்கொண்டு நேற்று தமிழகம் திரும்பபினார்.

பெங்களூருவில் இருந்து சென்னை வரும் பொழுது வழிநெடுகிலும் அவரது ஆதரவாளர்கள் ஆரவாரத்துடன் வரவேற்பு தெரிவித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், கத்திகுப்பம் பகுதியில் அமமுகவினர் பொக்லைன் இயந்திரம் மூலம் 500 கிலோ ஆப்பிள் மாலையுடன் சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஒசூர் சிப்காட் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில், ஒசூர் மோரணப்பள்ளி பிரத்யேங்கரா தேவி கோயில் ஆகிய கோவில்களுக்குச் சென்று அதிமுக வண்ண துண்டை ஏந்தியப்படி சசிகலா சாமி தரிசனம் செய்தார். வாணியம்பாடி வழியாக சென்னை வரும் வழியில் பட்டாசுகளை வெடித்து சசிகலாவை வரவேற்றனர்.

இவ்வாறாக தொண்டர்களின் உற்சாக வரவேற்புகளை ஏற்றுக்கொண்டு சசிகலா இன்று அதிகாலை சென்னை வந்தடைந்தார். சென்னை ராமாபுரத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடம், ஜானகி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய சசிகலா, அவரது வாரிசுகளிடம் நலம் விசாரித்தார்.

இதனையடுத்து பெங்களூருவிலிருந்து சுமார் 23 மணி நேர பயணத்திற்கு பிறகு இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியாவின் இல்லத்திற்கு சசிகலா வந்து சேர்ந்தார். சென்னை தியாகராய நகரில் உள்ள அபிபுல்லா சாலையில் கிருஷ்ணபிரியாவின் இல்லத்திற்கு வருகை தந்த சசிலாவிற்கு அவரது தொண்டர்கள் ஆரவாரமான வரவேற்பை அளித்தனர். 

Source: https://www.dailythanthi.com/News/State/2021/02/09075015/Sasikala-visits-a-house-on-Abibullah-Road-Chennai.vpf