சென்னை வந்தார் தலைமை தேர்தல் ஆணையர்.. பகல் 12 மணிக்கு அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் ஆயத்த பணிகளை ஆய்வு செய்ய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா சென்னை வந்தடைந்தார். இன்று பகல் 12 மணிக்கு அரசியல் கட்சித் தலைவர்களுடன் சுனில் அரோரா ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் தற்போதாய சட்டசபையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் புதிதாக தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழக சட்டசபை தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் பற்றி ஆய்வு செய்ய ஏற்கனவே இந்திய தேர்தல் ஆணைய பொதுச் செயலாளர் உமேஷ் சின்ஹா தலைமையில் உயர்மட்டக் குழு அதிகாரிகள் குழு கடந்த டிசம்பர் 22, 23-ந் தேதிகளில் சென்னைக்கு வந்திருந்தனர்.

அப்போது மாநில அரசு அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள், வருமான வரித்துறை, அமலாக்கத் துறை வங்கி அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். முன்னதாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளை சந்தித்து, தேர்தலை சுதந்திரமாக நடத்துவது குறித்து ஆலோசனைகளையும், கருத்துகளையும் கேட்டறிந்தனர்.

இந்த நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான தேர்தல் ஆணையத்தின் 8 அதிகாரிகள் கொண்ட குழு இன்று சென்னை வந்தது. இவர்கள் தமிழகத்தில் நடைபெறும் சட்டசபை பொதுத் தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வார்கள்.

சட்டசபை தேர்தல் தொடர்பாக 2 நாட்கள் இந்த ஆலோசனை நடைபெறுகிறது. இன்று பகல் 12 மணிக்கு அரசியல் கட்சித் தலைவர்களுடன் சுனில் அரோரா ஆலோசனை நடத்துகிறார்.

Source: https://tamil.oneindia.com/news/chennai/chief-election-commissioner-of-india-arrive-in-chennai-411546.html