186-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சென்னை மருத்துவக்கல்லூரி – மாலை மலர்

சென்னைச் செய்திகள்

சென்னை மருத்துவக்கல்லூரி, நாளை 186-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதன் தொடக்க விழாவில் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் உரையாற்றுகிறார்.

சென்னை:

சென்னை மருத்துவக்கல்லூரி, நாளை 186-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதன் தொடக்க விழாவில் சென்னை மருத்துவக்கல்லூரி முன்னாள் மாணவரும், எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருமான டாக்டர் சுதா சேஷய்யன் உரையாற்றுகிறார்.

ஆசியாவின் அடையாளமாக திகழும் சென்னை மருத்துவக்கல்லூரி 186-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 1835-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ந்தேதி தொடங்கப்பட்ட சென்னை மருத்துவப்பள்ளி, 1850-ம் ஆண்டு சென்னை மருத்துவக்கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது.

இந்தநிலையில் நாளை (சனிக்கிழமை) சென்னை மருத்துவக்கல்லூரி 186-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை கொண்டாடும் விதமாக, முன்னாள் மாணவர்கள், பேராசிரியர்கள், டாக்டர்கள் அடங்கிய சென்னை மருத்துவக்கல்லூரி பாரம்பரியத்தை பாதுகாக்கும் குழு சார்பில் காணொலி காட்சி மூலம் கொண்டாட இருக்கிறது.

மேலும் நாளை நடக்க இருக்கும் 186-வது ஆண்டு தொடக்க விழாவில், சென்னை மருத்துவக்கல்லூரி முன்னாள் மாணவரும், எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருமான டாக்டர் சுதா சேஷய்யன், 1835-ம் ஆண்டுக்கு பிறகு சென்னை மருத்துவக்கல்லூரியின் வளர்ச்சி மற்றும் 1664-ம் ஆண்டுக்கு பிறகு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் வளர்ச்சி குறித்து உரையாற்ற இருக்கிறார்.

இதுகுறித்து மூத்த டாக்டரும், குழந்தைகள் நலத்துறை பேராசிரியருமான டாக்டர் ஜெ.பாலசுப்பிரமணியன் கூறியதாவது:-

ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி சென்னை வந்ததும், தட்ப வெப்பநிலை மாறுபாட்டால் நோய்வாய் பட்ட ஆங்கிலேயர்களுக்கு சிகிச்சை அளிக்க 1664-ம் ஆண்டு கிழக்கிந்திய மருத்துவமனை தொடங்கப்பட்டது. பின்னர் சிகிச்சை அளிக்கும் ஆங்கிலேய டாக்டர்களுக்கு உதவியாக இந்தியர்கள் சிலர், மருத்துவ உதவியாளர்களாக பணியில் சேர்க்கப்பட்டனர்.

இந்தநிலையில், மருத்துவ உதவியாளர்களுக்கு உடற் கூறியியல் தொடர்பான அடிப்படை கல்வி அவசியம் என்பதை உணர்ந்து, 1835-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ந்தேதி சென்னை மருத்துவப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின் 1850-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1-ந்தேதி சென்னை மருத்துவக்கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது.

ஆசியாவின் அடையாளமாக திகழும் சென்னை மருத்துவக்கல்லூரி உலகின் தலைசிறந்த பல டாக்டர்களையும், ஆராய்ச்சியாளர்களையும் உருவாக்கி உள்ளது. சில நூற்றாண்டுகளுக்கு முன் ஆங்கில மருத்துவத்துக்கும், மருத்துவக் கல்விக்கும் தொடக்க புள்ளியாக, சென்னை மருத்துவக் கல்லூரி இருந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னை மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்ட தினத்தை கொண்டாடுவதற்கு, உதவியாக முன்னாள் சென்னை மருத்துவக்கல்லூரி மாணவரும், எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தருமான டாக்டர் சுதா சேஷய்யன், முன்னாள் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் டாக்டர் ஜெயந்தி, தற்போதைய டீன் டாக்டர் தேரணிராஜன் மற்றும் சென்னை மருத்துவக்கல்லூரி பாரம்பரியத்தை பாதுகாக்கும் குழுவை சேர்ந்த டாக்டர்கள், அமேந்திரன், முன்னாள் ராஜீவ்காந்தி மருத்துவமனை டீன் டாக்டர் குணசேகரன், டாக்டர் ஜெய வேலன், டாக்டர் சுபாஷ் இன்னும் பலர் உதவியாக இருக்கின்றனர்.

மேலும், ரூ.1.95 கோடி செலவில் சென்னை மருத்துவக்கல்லூரியில், இந்தியாவின் முதல் மருத்துவ அருங்காட்சியகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை அரசு விரைவு படுத்தி, விரைவில் திறக்க வேண்டும் இந்திய மாணவர்கள் குழு சார்பாக அரசுக்கு கோரிக்கை வைக்கின்றோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: https://www.maalaimalar.com/news/topnews/2021/02/12081251/2342638/Tamil-News-Chennai-Medical-College-entering-186th.vpf