பிரதமர் மோடி இன்று காலை சென்னை வருகை… நகர் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: தமிழகத்தில் பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 10.30 மணிக்கு சென்னை வருகிறார்.

சென்னை ஆவடி ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட அர்ஜூன் போர் பீரங்கியை இந்திய ராணுவத்துக்கு அர்ப்பணித்து வைக்கிறார் பிரதமர் மோடி.

பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னை முழுவதும் 10,000 போலீசார் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாஜகவின் திட்டம்

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் முக்கிய கட்சிகள் தேர்தல் கூட்டணியை இறுதி செய்யும் பணியில் இறங்கி உள்ளன. தமிழகத்தில் வலுவாக காலூன்ற வேண்டும் என்பது பாஜகவின் நீண்ட நாளைய ஆசை. அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறது பாஜக. சில மாதங்களுக்கு முன்பு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சென்னை வந்து பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.

பிரதமர் மோடி.சென்னை வருகை

இந்த நிலையில் ஒரு நாள் அரசு முறை பயணமாக இன்று காலை தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. கொரோனா காலகட்டத்துக்கு பிறகு பிரதமர் மோடி தமிழகம் வருவது இதுதான் முதல் முறையாகும். இன்று காலை சென்னை நேரு உள்நாட்டு விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் உள்ளார் பிரதமர் மோடி.

திட்டங்கள் தொடங்கி வைக்கிறார்

இந்த விழாவில் பிரதமர் சென்னை வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் இடையே ரூ.3,770 கோடி செலவில் நிறைவேற்றப்பட்ட சென்னை மெட்ரோ ரெயில் முதல்கட்ட விரிவாக்க திட்டதை தொடங்கி வைக்கிறார். மேலும் விழுப்புரம்-கடலூர், மயிலாடுதுறை-தஞ்சை மற்றும் மயிலாடுதுறை-திருவாரூர் இடையே 228 கி.மீ. தொலைவுக்கு மின்மயமாக்கப்பட்டு உள்ள ஒருவழி ரெயில் பாதை ஆகியவை உள்பட பல்வேறு முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

அர்ஜூன் போர் பீரங்கி அர்ப்பணிப்பு

கல்லணை கால்வாய் விரிவாக்கம், புதுப்பிப்பு மற்றும் நவீனப்படுத்துதல் திட்டத்துக்கும், சென்னை தையூரில் ரூ.1,000 கோடி செலவில் ஐ.ஐ.டி.க்காக அமைக்கப்பட உள்ள ‘டிஸ்கவரி கேம்பஸ்’ வளாகம் அமைப்பதற்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். மேலும் சென்னை ஆவடி ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட அர்ஜூன் போர் பீரங்கியை இந்திய ராணுவத்துக்கு அர்ப்பணித்து வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், மத்திய-மாநில அரசின் உயரதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர்.

பாஜக சார்பில் வரவேற்பு

இந்த விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை 10.35 மணிக்கு சென்னை வருகிறார். அங்கிருந்து ‘ஹெலிகாப்டரில் சென்னை நேப்பியர் பாலம் அருகில் உள்ள ஐ.என்.எஸ். அடையார் கடற்படை தளத்துக்கு காலை 11 மணிக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு வருகிறார். பிரதமருக்கு 5 இடங்களில் பா.ஜ.க., அ.தி.மு.க. சார்பில் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

உச்சக்கட்ட பாதுகாப்பு

பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னை முழுவதும் 10,000 போலீசார் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளது. விழா நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்கில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமரின் வருகையால் சென்னையில் இன்று காலை 8 மணி முதல் மதியம் 1 வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விழா முடிந்ததும் பிரதமர், முதல்வர், துணை முதல்வரை சந்தித்து பேசுவார் என தெரிகிறது. இதனால் பாஜக-அதிமுக கூட்டணி தொகுதி பற்றி முடிவு செய்யபப்டும் என்று தெரிகிறது.

Source: https://tamil.oneindia.com/news/chennai/pm-modi-will-arrive-in-chennai-at-10-30-am-today-to-launch-various-projects-in-tn-411949.html