மெட்ராஸ் வரலாறு: “கூவம் ஆற்றில் பயணம் செய்த ரோமாபுரி மன்னர்கள்”| பகுதி-1 – விகடன்

சென்னைச் செய்திகள்

சென்னையில் தீவுத் திடல் அருகே செயின்ட் ஜார்ஜ் கோட்டையைக் கட்டினான். தீவுத்திடல் உருவாக காரணமாக இருந்த இந்த இரண்டு கிளைகளும், மீண்டும் நேப்பியர் பாலம் அருகே அதாவது சென்னை பல்கலைக்கழகத்தின் பக்கவாட்டிலே மெரினா கடற்கரையில் கடலில் சேர்கிறது. நாம் கூவம் ஆற்றை பாலங்கள் குறுக்கிடும் இடத்தில் மட்டுமே பார்த்துவிட்டு, அது நம் வாழ்க்கையில் குறுக்கிடும் ஒரு தடையாகவே நினைக்க ஆரம்பித்துவிட்டோம். சிக்னல் கிடைக்காத எரிச்சலில் இந்த ஆற்றின் குறுகலான பாலத்தையும், நாற்றத்தையும் திட்டித் தீர்க்கிறோம். சென்னை நகரம் முழுக்க எத்தனைப் பாலங்கள்… அவை சென்னையை வழி நடத்தும் பாதைகள். அது மட்டும் நல்ல ஆறாகக் காப்பாற்றப்பட்டிருந்தால் இப்போது மெட்ரோ ரயில் என்ற கோடிகளை விழுங்கும் இந்த குட்டி ரயில் தேவைப்பட்டிருக்காது.

ரோமாபுரி மன்னர்கள் இந்த ஆற்றின் வழியே வர்த்தகம் செய்ததற்கான ஆதாரங்கள் புதை ஆய்வுகளில் கிடைத்துள்ளன. ரோம் தேசத்து வைன் ஜாடிகள், நாணயங்கள் இந்த ஆற்றின் கரையில் கண்டெடுக்கப்பட்டன. இந்த ஆற்றின் கரையில் புகழ் வாய்ந்த பல கோயில்கள் கட்டப்பட்டன. திருவீர்கோலம், வீரபத்ரசாமி கோயில், திருவேற்காடு போன்ற பல கோயில்களும் ஊர்களும் அமைந்துள்ளன. எல்லா ஆற்றங்கரை நாகரிகம் போலவே கூவம் ஆற்றுக்கும் ஒரு நாகரிகம் இருந்தது. ஆறு மாசுபட்டதும் ஆந்த ஆற்றின் கரைகளில் வசிக்கும் மக்கள் மாசுபட்டதும் சேர்ந்தே நடந்தது. இன்று சென்னை கூவம் ஆற்றின் கரையில் வசிக்கும் மக்கள் இந்த மண்ணின் பூர்வகுடிகளாக இருக்கக் கூடும். அவர்கள் பெரும்பாலும் ரிக்‌ஷா ஓட்டுகிறார்கள், படிக்காதவர்களாக இருக்கிறார்கள், நிரந்தரம் இல்லாத கூலி வேலைகளைச் செய்கிறார்கள், ஒரு சாண் வயிற்றுக்காக சமூகம், ‘வேலை’ என்று ஏற்றுக்கொள்ளாத வேலைகளைக்கூடச் செய்யத் துணிகிறார்கள். ஆற்றின் தூய்மையும், அவர்களின் தூய்மையையும் காப்பாற்ற வேண்டியது நல்ல அரசு செய்ய வேண்டிய கடமை. நட்ட நடு நகரம் இப்படி இருக்கவே கூடாது.

இந்த ஆற்றைக் காப்பாற்ற வேண்டும் என்று அண்ணா ஆட்சிக் கட்டிலில் அமர்ந்ததும் 1967-ல் திட்டம் வகுத்தார். ஆற்றைத் தூய்மைப்படுத்த வேண்டும். அதிலே போக்குவரத்து நடைபெற வேண்டும் என்பது அவர் கண்ட கனவு. அப்போது கருணாநிதி பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தார். பின்னர் கருணாநிதி முதலமைச்சர் ஆனபோது திட்டம் விரைவுபடுத்தப்பட்டது.

குமணன் துறை, குகன் துறை, பாரி துறை என்ற பெயரில் எல்லாம் கூவம் ஆற்றிலே படகுத் துறைகள் அமைக்கப்பட்டன. ஆற்றில் படகுகள் ஓடின. அதில் நானும் பயணம் செய்தேன்.

அதைப் பற்றி அடுத்து பார்ப்போம்….

Source: https://www.vikatan.com/best-of-vikatan/vikatan-vintage/history-of-madras-romapuri-kings-who-traveled-on-the-river-cooum