பிப்ரவரி மாதத்தில் ஒரு ஆச்சரியம்.. சென்னை முதல் பெங்களூர் வரை.. பரவலாக வெளுக்கும் மழை – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை, செங்கல்பட்டு முதல், பெங்களூர் வரை ஆங்காங்கு லேசான மழை பெய்துள்ளது. மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் நேற்று கூறியது.

கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், கோவை, நீலகிரி வரை மழை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்திருந்தது.

செங்கல்பட்டில் மழை

வரும் 22ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று திடீர் மழை பெய்தது. இதனால் இதமான தட்பவெப்பம் அங்கு நிலவியது.

சென்னை மழை

சென்னை புறநகர் பகுதிகளான, குரோம்பேட்டை, பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் பொழிச்சலூரில் இன்று மதியம் மேக மூட்டத்துடன் லேசான மழை பெய்தது. சென்னை கோயம்பேடு, அரும்பாக்கம், மதுரவாயல் உள்ளிட்ட சில இடங்களில் லேசான தூறல் மழை பெய்தது.

பெங்களூர் மழை

பெங்களூரைப் பொறுத்தளவில் மாலை 4.45 மணிக்கு பிறகு, திடீரென மழை கொட்டத் தொடங்கியது. பெரிய துளிகளாக அவை காட்சியளித்தன. சுமார் 15 நிமிடங்களுக்கு மேல் கன மழையாக பெய்தது. பொம்மனஹள்ளி, பேகூர், ஹெச்எஸ்ஆர் லேஅவுட், சிங்கச்சந்திரா உள்ளிட்ட தெற்கு பெங்களூரில் இதுபோல மழை பதிவானது. பிப்ரவரி மாதம் இப்படி வட தமிழகம் முதல் பெங்களூர் வரை மழை பெய்ததை மக்கள் ஆச்சரியமாக பார்க்கிறார்கள்.

கன மழை

இந்த வருடம் ஜனவரி மாதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்னையில் மழை பதிவாகியிருந்தது. மிகவும் அரிதான நிகழ்வுகள் இவை என்கிறார்கள். உலகம் வெப்பமயமாதல் தாக்கத்தால்தான் இதுபோன்ற வானிலை மாற்றங்கள் ஏற்படுகிறது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

Source: https://tamil.oneindia.com/news/chennai/rain-lashes-chennai-bangalore-today-412496.html