மெட்ராஸ் வரலாறு: தனி ரயில் வண்டி வைத்திருந்த இந்த தமிழரைத் தெரியுமா? – பகுதி 3 – விகடன்

சென்னைச் செய்திகள்

பெரியார், தினத்தந்தி சி.பா.ஆதித்தனார் ஆகியோருடன் இன்னொருவரும் ஏலத்துக்கு விண்ணப்பித்தனர். அவர் கோவையைச் சேர்ந்த விஞ்ஞானி ஜி.டி.நாயுடு. மூன்று பேருக்கான பகுதிகளாக இருந்த அந்த இடத்தை, பின்னர் ஜி.டி. நாயுடு விலகிக்கொள்ளவே பெரியாரும் ஆதித்தனாரும் அந்த இடத்தைப் பிரித்துக்கொண்டனர். மெட்ராஸின் முகம் இந்த அளவுக்கு மாறியதற்கு திராவிடர் கழகமும் தினத்தந்தியும் முக்கியக் காரணம் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஏனென்றால் தமிழகத்துக்கு என ஒரு கருத்தை உருவாக்கியதில் அந்த நாளிதழுக்கும் அந்த இயக்கத்துக்கும் பங்கு இருப்பதுதான் காரணம். சென்னை மக்களை நத்தை வேகத்தில் நடத்திய ட்ராம் வண்டிகள் இருந்த இடத்தில் இருந்துதான், பின்னர் அசுர வேகத்தில் மாற்றங்கள் நிகழ்ந்தன என்பது ஒரு நகை முரண்.

கன்னிமாரா நூலகம்

இன்னொரு ஆச்ச்ர்யமான செய்தி… தனியாக காரோ, பஸ்ஸோ வைத்திருந்தவர்களைப் பார்த்திருப்பீர்கள். தனியாக ரயில் வைத்திருந்தவர் ஒருவர் சென்னையில் இருந்தார். சென்னையிலுள்ள பல பிரசித்தி பெற்ற, சிவப்பு நிறத்திலுள்ள பல கட்டடங்களை உருவாக்கிய கட்டட மேதை, ‘தாட்டிகொண்ட நம்பெருமாள்’ செட்டியார். பாரிமுனையில் உள்ள உயர் நீதிமன்றம், சட்டக்கல்லூரி, எழும்பூரில் உள்ள சிற்பக் கலை கல்லூரி, மியூசியம், கன்னிமாரா நூலகம் போன்றவை இவரால் கட்டப்பட்டவை. 18-ம் நூற்றாண்டின் மத்தியில் ஆங்கிலேயர்களுக்கு கிடைத்த பில்டிங் கான்ட்ராக்டர் இவர். இவர் வாழ்ந்த வீடு, ‘வெள்ளை மாளிகை’ என்ற பெயருடன், சேத்துப்பட்டு மேம்பாலம் அருகில், டாக்டர் மேத்தா மருத்துவமனையின் பின் உள்ளது. இதில், மூன்று மாடிகள், 30 அறைகள் உள்ளன. இது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. சீனா, ஜப்பான், இத்தாலி, இங்கிலாந்து போன்ற நாடுகளில், பீங்கானில் செய்யப்பட்ட அரிய கலைப் பொருட்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளன. எழும்பூர் பாந்தியன் சாலையிலிருந்து, ஹாரிங்டன் சாலை வரை உள்ள நிலப்பரப்பு அவருக்குச் சொந்தமாக இருந்தது. அதனால் அது ‘செட்டியார் பேட்டை’ என அழைக்கப்பட்டது. நாளடைவில், “செட்டிபேட்டை’ என மருவி, இன்று, “செட்பெட்’ என மாறிவிட்டது. ஆங்கிலேயர் பலருக்கு வீடு கட்டித் தந்தவர் அவர்.

ராமானுஜம்

ராமானுஜம்

கணித மேதை ராமானுஜம் தம் இறுதி நாட்களை செட்டியார் வீட்டில் கழித்தார். இங்கிலாந்திலிருந்து திரும்பிய ராமானுஜருக்கு, காசநோய் பாதிப்பு அதிகமாகிவிட்டதால், அவரது உறவினர்கள் பயந்துபோய், திருவல்லிக்கேணியில் இருந்த அவர்களது வீட்டில் வைத்துக் கொள்ளவில்லை.அப்போது, நம்பெருமாள் செட்டியார் அவரை அழைத்து வந்து, தனி அறை, தனி சமையல், சிறப்பு வைத்தியம் முதலிய ஏற்பாடுகள் செய்து, அவரைக் காப்பாற்ற எல்லா முயற்சிகளையும் செய்தார். ஆனால், ராமானுஜம் முட்டை முதலியவற்றை சாப்பிட மறுத்ததால், காசநோய்க்கு இளம் வயதில் மறைந்தார். அவர், கடல் கடந்து வெளிநாடு சென்றதால், அவரது உடலைக் கூட ஏற்றுக்கொள்ள உறவினர்கள் மறுத்தனர். ஆதலால், நம்பெருமாள் செட்டி அவர்களே அவரது ஈமச் சடங்குகளை செய்தார். ராமானுஜத்தின் மரணச் சான்றிதழ், இன்றும் செட்டியார் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

Source: https://www.vikatan.com/best-of-vikatan/vikatan-vintage/history-of-madras-man-who-had-a-separate-train-in-tamilnadu-part-3