ஆபத்தில் 1,35,250 மரங்கள்… புதிய பெங்களூர் – சென்னை விரைவுச்சாலையின் சூழலியல் சிக்கல்கள் என்ன? – Vikatan

சென்னைச் செய்திகள்

சென்னையிலிருந்து பெங்களூர் வரை, 262 கிலோமீட்டர் தொலைவுக்கு எட்டு வழி விரைவுச் சாலை போடும் திட்டத்தைச் செயல்படுத்த, தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் நீண்ட நாள்களாக முயன்று வருகிறது. 13,500 கோடி செலவில் திட்டமிடப்பட்டுள்ள இந்தச் சாலை கட்டமைப்பின் முதல் கட்டமாக நான்கு வழிச்சாலை அமைக்கப்படும். இது, சென்னையின் எல்லைப் பகுதியான திருவள்ளூர் மாவட்டத்தின் திருபாண்டியூரில் தொடங்கி, கிழக்கு பெங்களூரில் முடிகிறது.

இது பல்வேறு சூழலியல் அமைப்புகளைச் சிதைத்துவிடும் என்று சூழலியல் ஆர்வலர்கள் மத்தியிலிருந்து விமர்சனங்கள் எழுந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்தச் சாலையை அமைப்பது குறித்த பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் வருகின்ற மார்ச் 13 மற்றும் 16-ம் தேதிகளில் ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் நடைபெறும் என்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் தற்போது அறிவித்துள்ளது.

Highway (Representational Image)
Photo: Vikatan / T. Vijay

இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் முன்னெடுத்திருக்கும் தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் இந்தியா முழுவதும் அமைக்கப்படவுள்ள 1,000 கிலோமீட்டர் விரைவுச்சாலைகளில் இதுவும் ஒன்று. இந்த விரைவுச்சாலை, கர்நாடகாவிலுள்ள ஹோஸ்கோட், பங்காரபேட்டை, கோலார் ஆகிய பகுதிகளை இணைத்து, சென்னையின் எல்லைப் பகுதியான திருவள்ளூர் மாவட்டம் வரை நீள்கின்றது. இது செயல்படுத்தப்பட்டால், தற்போது சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு ஆகும் 5 மணி நேரம் 30 நிமிடங்கள் என்ற கால அவகாசம் குறைந்து, வெறும் 3 மணி நேரத்தில் பயணித்துவிட முடியும் என்று இத்திட்டத்துக்கான சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அது, பொருளாதார அடிப்படையில் நல்ல பலன் தருமென்றும் கணிக்கப்படுகிறது. இருப்பினும், இதன்விளைவாக நிகழப்போகும் சூழலியல் சீர்கேடுகள் குறித்தும் கவனித்தாக வேண்டியுள்ளது. நிலம் கையகப்படுத்துதல், நீர்நிலைகள் சீரழிதல் என்று பல்வேறு சீர்கேடுகள் இதனால் நிகழும். பெங்களூருவில் மட்டுமே 72 கிராமங்களை ஊடுருவி இந்த விரைவுச்சாலை பயணிக்கவுள்ளது. அங்கு கையகப் படுத்தப்போகும் 764.08 ஹெக்டேர் நிலப்பகுதியில், 717.35 ஹெக்டேர் தனியார் நிலப்பகுதிகள். இந்தச் சாலை, பாலாறு மற்றும் 73 உள்ளூர் ஓடைகளை ஊடுருவிச் செல்லும்.

Source: https://www.vikatan.com/government-and-politics/environment/activists-warn-about-environmental-impact-of-bengaluru-chennai-new-expressway-project