இன்று முதல் சென்னை புத்தகக் காட்சி… என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்?! – Vikatan

சென்னைச் செய்திகள்

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில் 44-வது புத்தகக் காட்சி, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று (பிப்ரவரி 24) தொடங்குகிறது. துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தொடக்கி வைக்கவுள்ளாா். இந்த புத்தகக் காட்சி மார்ச் 10-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

வெறும் புத்தக விற்பனைக்கான இடமாக மட்டுமல்லாமல், எழுத்தாளர்கள், வாசகர்கள், கலை, இலக்கியப் பண்பாட்டு ஆர்வலர்கள் ஆகியோர் சந்தித்துக் கொள்ளும் ஒரு கலாசார நிகழ்வாக சென்னை புத்தகக் காட்சி விளங்குகிறது. கொரோனா கட்டுப்பாடுகளால் ஜனவரி மாதம் புத்தகக் காட்சி நடைபெறாதது குறித்த ஏமாற்றத்தில் இருந்த வாசகர்கள், இன்று தொடங்கவிருக்கும் புத்தகக் காட்சியை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கின்றனர்.

கொரோனாவின் தாக்கம் இன்னும் முடிந்திராத நிலையில், தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ள அனைத்து கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பின்பற்றப்படும் என பபாசி குழு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு புத்தகக் காட்சியில் 700 அரங்குகளில் சுமார் ஆறு லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் இடம்பெறுகின்றன.

காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் புத்தகக் காட்சிக்கு நுழைவுக் கட்டணம் ரூ. 10.

கடந்த ஆண்டு புத்தகக் காட்சியை சுமார் 10 லட்சம் பேர் பார்வையிட்டனர். இந்த ஆண்டு கொரோனா அச்சம் ஒருபுறம் இருந்தாலும், நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடைபெறும் ஒரு நிகழ்வு என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. வாசகர்களின் வருகையும் முந்தைய ஆண்டைப் போல் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

2021 புத்தகக் காட்சியின் சிறப்பம்சங்கள்

* ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் நடிகா் கமல்ஹாசன் பரிந்துரைத்த புத்தகங்கள் தனி அரங்கில் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் பிப்ரவரி 24-ஆம் தேதி முதல் ட்விட்டர் மூலம் கமல் ஹாசன் சில புத்தகங்களை அறிமுகம் செய்ய உள்ளார். அந்தப் புத்தகங்களும் அந்த அரங்கில் கிடைக்கும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

* சிறிய எழுத்தாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் தங்கள் நூல்களை காட்சிப்படுத்த வழிசெய்யும் வகையில் இந்த ஆண்டு ‘ரேக் ’என்ற புதிய திட்டம் தொடங்கப்பட உள்ளது. அதற்கான நூல் அடுக்ககங்கள் பபாசி சாா்பில் வழங்கப்படும்.

* உலக அறிவியல் தினமான பிப்.28 அன்று, ஒவ்வொரு அரங்கிலும் உள்ள அறிவியல் நூல்களின் விற்பனையை அதிகப்படுத்தும் நோக்கில் சிறப்பு நிகழ்வுகள் நடைபெறும்.

* மகளிா் தினமான மாா்ச் 8 அன்று, ஒவ்வொரு அரங்கிலும் அந்தந்தப் பதிப்பாளா்கள் அவா்களுடைய பதிப்பகப் பெண் எழுத்தாளா், வாசகா் சந்திப்பு நடைபெறும்; புத்தகங்களில் கையொப்பமிடும் நிகழ்வும் ஒருங்கிணைக்கப்படும். அன்றைக்கு நடைபெறும் மேடை நிகழ்ச்சிகள் அனைத்தும் பெண்களே பங்கேற்கும் வகையில் நடத்தப்படும்.

* இந்த ஆண்டு வாசிப்பை வளர்க்கும் விதமாக குழந்தைகளுக்கு கதை சொல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் பங்கேற்க உள்ளனர்.

சில இணைப்புகள்

இந்த ஆண்டு சென்னை புத்தகக் காட்சியில் இடம்பெறும் அரங்குகளின் பட்டியலை இங்கு பார்க்கலாம்.

Chennai Book Fair 2021 – Stalls List

நுழைவுச் சீட்டினை வரிசையில் நின்று பெறுவதற்குப் பதிலாக, ஆன்லைனிலேயே கட்டணம் செலுத்திப் பெறலாம்.

https://bapasi.com/book-fair-passes/

சென்னை புத்தகக் காட்சி குறித்த பபாசியின் அப்டேட்ஸைப் பெற அதன் ஃபேஸ்புக் பக்கத்தைப் பின்தொடரலாம்

https://www.facebook.com/bapasi/

Source: https://www.vikatan.com/arts/literature/chennai-book-fair-begins-tomorrow