சென்னையில் துடிக்க துடிக்க வெட்டிக் கொல்லப்பட்ட ஜெயந்தி.. ஐடி பெண் ஊழியருக்கு நேர்ந்த கொடூரம் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை அமைந்தகரையில் வீடு புகுந்து ஐடி பெண் ஊழியரின் தாய் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். ஐடி பெண் ஊழியருக்கும் சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இந்த சம்பவத்தை செய்த மர்ம நபரை போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு தேடி வருகின்றனர்.

சென்னை அமைந்தகரை வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் கமலக்கண்ணன், கார் டிரைவர். இவரது மனைவி ஜெயந்தி (44). இவர்களது மகள் மோனிகா (23), கல்லூரி படிப்பை முடித்து, சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

நேற்று காலை கமலக்கண்ணன் வழக்கம்போல் வேலைக்கு சென்றார். ஜெயந்தி, மோனிகா ஆகியோர் வீட்டின் மாடியில் உள்ள அறையில் இருந்தனர். சுமார் 11.30 மணிக்கு மர்ம நபர்கள் 2 பேர், அந்த அறைக்குள் நுழைந்து தாய், மகள் இருவரையும் துடிக்க துடிக்க அரிவாளால் வெட்டி சாய்த்தனர்

மோனிகா

இதில், பலத்த காயமடைந்த ஜெயந்தி ரத்த வெள்ளத்தில் மயங்கினார். மோனிகாவும் பலத்த காயங்களுடன் அலறி துடித்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதை பார்த்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். அவர்களை பொதுமக்கள் விரட்டி பிடிக்க முயன்றபோது, இருவரும் அரிவாளை காட்டி மிரட்டியபடி அங்கிருந்து எஸ்கேப் ஆகினர்.

ரத்த வெள்ளம்

இதையடுத்து, அங்கிருந்த மக்கள் மாடிக்கு சென்று பார்த்தபோது, ஜெயந்தி, மோனிகா இருவரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியது தெரிந்தது. இதுபற்றி அமைந்தகரை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தாய் பலி

அதன்பேரில், சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்தனர். படுகாயமடைந்த தாய் மகள் இருவரையும் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஜெயந்தி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

மோனிகா தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். முதற்கட்டமாக, அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்ததில், 2 வாலிபர்கள் அரிவாளுடன் ஓடுவதும், அந்த வழியாக வந்த ஆட்டோவை அரிவாளை காட்டி மறித்து, அதில் ஏறி தப்பி செல்வதும் தெரிந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, காதல் பிரச்னையா அல்லது முன்பகை காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-it-female-employee-s-mother-hacked-to-death-413243.html