மெட்ராஸ் வரலாறு: அன்றைய லிட்டில் இந்தியா – ‘மூர் மார்க்கெட்’ கதை தெரியுமா? -பகுதி 5 – விகடன்

சென்னைச் செய்திகள்

அந்தப் பாடல் வரியில் இடம் பெற்ற மூர் மார்க்கெட் ஒரு குட்டி இந்தியாவாக இருந்தது. அங்கே பல மொழியினர், பல மதத்தினர் இருந்தனர். உண்மையில் மெட்ராஸை பூர்வீகமாகக் கொண்டவர்களைவிட மற்றவர்கள் அதிகமாக இருந்தனர். அங்கே பல பொருட்கள் விற்கப்படும். குரங்கு, கிளி வண்ணமீன், புத்தகங்கள், ஆட்டுக்கறி, அடுப்புக்கரி… சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், ஏழைகளின் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் அது. அங்கே ஒரு மூலிகைத் தைலம் விற்கும் காட்சியை அன்றைய பத்திரிகையில் இப்படி எழுதியிருந்தார்கள்…

ஒரு வட இந்திய சந்நியாசி மூலிகையை விற்கிறார். அவருடைய தாடி, ஜோடனை எல்லாம் பாதையில் போகிறவர்களை வசீகரிக்கக் கூடியதாக இருக்கிறது. அவரைத் தன் குருநாதர் என்று அறிமுகப்படுத்திக்கொள்கிறார் ஒருவர். குருநாதர் ஹிந்துஸ்தானி மட்டுமே தெரிந்தவர். அவர் பேசுவதை தமிழில் தாம் மொழி பெயர்க்கப் போவதாகச் சொல்கிறார்.

குருநாதர்: ஜனக் ஜனக் பாயல் பஜே

சீடர்: மகா ஜனங்களே

குரு: ஆஷிக்… ஆஷிக்.

சீடர்: வாருங்கள்… வாருங்கள்.

குரு: ஹூ கௌந்தீ?

சீடர்: இது என்ன?

குரு: சோடி பஹன்

சீடர்: சின்ன பாட்டில்.

குரு: ஜிஷ் தேஷ் மேகங்கா பக்தீஹை.

சீடர்: இதற்குள் என்ன இருக்கிறது?

குரு: ஆவோ பியார் கரேன்

சீடர்: அவுத்திக் கீரை தைலம்.

குரு: ஜான்கர்.

சீடர்: ஜலதோஷம்.

குரு: மம்தா.

சீடர்: மார்வலி.

குரு: ஜப் ஜப் பூல் கிலே.

சீடர்: அப்பப்போ உடம்பு வலி.

குரு: ஆவாரா.

சீடர்: ஆகியவற்றை.

குரு: கும்நாம்.

சீடர்: குணப்படுத்தும்.

குரு: இந்தக்ஹாம்

சீடர்: இந்த பாட்டில்.

குரு: ஏக் பூல் தோ மாலி.

சீடர்: ஒரு ரூபா பத்துக் காசு.

குரு: ராம் அவுர் ஷியாம்.

சீடர்: காலையிலும் மாலையிலும்

குரு: பர்சாத்… பர்சாத்.

சீடர்: பருகுங்கள்… பருகுங்கள்.

குரு: பூல் அவுர் பந்தர்.

சீடர்: பூலோகமெலாம் தேடினாலும்.

குரு: அம்ராபாலி… அம்ராபாலி.

சீடர்: அகப்படாது… அகப்படாது.

Source: https://www.vikatan.com/best-of-vikatan/vikatan-vintage/history-of-madras-story-of-moore-market-in-chennai