மதுரவாயல் தொகுதியில் சென்னை தமிழச்சியை களமிறக்கிய கமல்ஹாசன்.. EIAவை தெறிக்கவிட்ட யூடியூபர் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: மக்கள் நீதி மய்யம் சார்பில் மதுரவாயலில் போட்டியிடுபவர் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு குறித்து மத்திய அரசை கண்டித்ததோடு சரமாரியாக கேள்வி எழுப்பிய யூடியூபர் பத்மப்ரியாவை நினைவிருக்கிறதா? அவர்தான் போட்டியிடுகிறார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் 136 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு 98 இடங்களை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிலையில் முதற்கட்டமாக 70 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டார் கமல்ஹாசன்.

இவரது வேட்பாளர்கள் பட்டியலில் முன்னாள் ஐஏஸ் அதிகாரி, சமூக செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

imageஅண்ணாநகரில் பொன்ராஜ். விருகம்பாக்கத்தில் சினேகன் மநீம கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் ரிலீஸ்

யூடியூபர்

அதில் ஒருவர்தான் மதுரவாயல் தொகுதியில் போட்டியிடும் பத்மப்ரியா. யார் இவர்? யூ டியூப் சேனலை நடத்தி வருகிறார். இவரது யூடியூப் பெயர் சென்னை தமிழச்சி. இவர் தனது யூடியூப் சேனலில் மக்கள் விரோத சட்டங்களை எதிர்த்து குரல் கொடுத்து வருகிறார். அந்த வகையில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு குறித்து இவரது வீடியோ வைரலானது.

மத்திய அரசுக்கு விமர்சனம்

இந்த வீடியோவில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்ததோடு கேள்விக் கணைகளை சரமாரியாக தொடுத்தார். இதனால் அவருக்கு தனிப்பட்ட முறையில் விமர்சனங்கள், மிரட்டல்கள், அரசியல் அழுத்தம் வந்தது. இதையடுத்து தனது வீடியோவை நீக்கிய அவர், எதற்காக நீக்கினார் என்ற விவரங்களையும் அளித்தார்.

மனஉளைச்சல்

இந்த வீடியோவால் எழுந்த விமர்சனங்களால் பத்மப்ரியாவின் குடும்பத்தினரும் நண்பர்களும் மனரீதியில் கடுமையாக பாதிக்கப்பட்டதையடுத்து வீடியோவை நீக்க முடிவு செய்ததாக தெரிவித்திருந்தார். மேலும் பாஜக தலைவர் கல்யாண், பத்மப்ரியாவின் சுயவிவரங்களை கேட்டு ட்வீட் அனுப்பியிருந்தார். மேலும் அவர் மீது கல்யாண் மோசமான கருத்துகளையும் முன்வைத்தார். இந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு குறித்து நடிகர்கள் சூர்யா, கார்த்தி உள்ளிட்டோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

பத்மப்ரியா

அத்தகைய வீரமிக்க சென்னை தமிழச்சியான பத்மப்ரியாவுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியில் மதுரவாயல் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தவறுகளை தட்டிக் கேட்கும் பத்மப்ரியா மதுரவாயலில் பெரிய கட்சிகளுக்கு ஈடாக பிரச்சாரம் செய்து அப்பகுதி மக்களுக்கு டார்ச் மூலம் “ஒளி” கொடுப்பாரா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Source: https://tamil.oneindia.com/news/chennai/you-tuber-padmapriya-contest-in-maduravoyal-assembly-414445.html