சென்னையில் 2வது நாளாக தபால் வாக்குகள் பதிவு – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னையில் 2வது நாளாக தபால் வாக்குகள் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரோனா பாதித்தவர்கள் தபால் மூலம் வாக்கு செலுத்த தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

தபால் வாக்கு அளிப்பதற்காக விண்ணப்பித்தவர்களுக்கு வாக்குச் சீட்டுகளை வழங்கும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையடுத்து நேற்று முதல் சென்னையில் தபால் வாக்கு பெறும் பணி தொடங்கியது. அதன்படி 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் வீடுகளுக்கே சென்று தபால் வாக்குகள் பெறப்படுகின்றன.

இதனை தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் தபால் வாக்குகளை பதிவு செய்யும் பணி 2வது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. அங்கு மொத்தம் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் 7,300 பேருக்கு தபால் வாக்கு செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

முதல் நாளான நேற்று தேர்தல் அலுவலர்கள் 5 குழுக்களாக பிரிந்து ஒரு குழுவிற்கு 15 பேர் என மொத்தம் 75 வாக்குகளை பதிவு செய்ய வேண்டிய நிலையில், 64 வாக்குகள் நேற்று பதிவு செய்யப்பட்டன. மீதம் உள்ள நபர்களில் ஒரு சிலர் உயிரிழந்துள்ளதாகவும், சிலரின் வீடுகள் பூட்டப்பட்டிருந்ததாகவும் தேர்தல் நடத்தும் அலுவலர் மோகன்ராஜ் தெரிவித்துள்ளார். 

Source: https://www.dailythanthi.com/News/State/2021/03/27122907/Postal-votes-registered-for-the-2nd-day-in-Chennai.vpf