பெண்கள் பாதுகாப்பாக வாழும் நகரமாக சென்னை விளங்குகிறது- எடப்பாடி பழனிசாமி – மாலை மலர்

சென்னைச் செய்திகள்

சென்னை மாநகரத்தில் மட்டும் மழை நீர் கால்வாய் 954 கிலோ மீட்டர் நீள சாலைகளுக்கு கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியிலே போட்டியிடுகின்ற கழகத்தின் வெற்றி வேட்பாளர் ஆர்.நட்ராஜ் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர். திறமையானவர், காவல் துறையில் உயர்பதவி வகித்து மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர்.

அவரை இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தி.மு.க தலைவர் ஸ்டாலின் செல்லுமிடமெல்லாம், நமது அரசைப்பற்றியும், கட்சியைப் பற்றியும், கூட்டணி கட்சியினரைப் பற்றியும் அவதூறாக பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். ஆனால், அ.தி.மு.க.வை பொறுத்த வரையில், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் செய்த சாதனைகளையும், அதற்குப் பின்னால் அம்மாவின் அரசு செய்துள்ள சாதனைகள், நன்மைகளை மக்களிடம் எடுத்துக்கூறி வருகின்றோம்.

தி.மு.க ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது. தி.மு.க ஆட்சி காலத்தில் தான் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, நில அபகரிப்பு, கூலிப்படை என்று அமைதி இழந்து தமிழகம் இருந்தது.

இந்த நிலைமைக்கு எல்லாம் புரட்சித்தலைவி அம்மா முடிவுகட்டி, தூய்மையான ஆட்சியை தமிழ்நாட்டுக்கு மக்களுக்கு தந்தார். இன்றைக்கு இந்திய நாடே திரும்பிப்பார்க்கும் அளவுக்கு சட்டம்-ஒழுங்கில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது.

இந்தியாவில் எத்தனையோ மாநிலங்கள் இருந்தாலும், அமைதி தவழும் மாநிலம் தமிழ்நாடு. இந்தியா டுடே என்னும் ஆங்கில இதழ் நாடு முழுவதும் ஆய்வு செய்து, சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பதில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு என தேர்வு செய்து விருது வழங்கியது. அந்த விருதினை துணை ஜனாதிபதியிடமிருந்து நானே நேரில் பெற்று வந்தேன். இது அம்மாவின் அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதற்கு கிடைத்த விருது. அதே போல, பெண்கள் பாதுகாப்பாக வாழ உகந்த மாநகரம் சென்னை என்றும் தேர்வுசெய்யப்பட்டு விருது பெற்றுள்ளோம்.

சென்னை பரந்து விரிந்த மக்கள் தொகை நிறைந்த மாநகரம். புதிய தொழில்கள் சென்னையை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. இதனால் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கின்றது. சென்னை மாநகரில் குற்றங்களைக் குறைப்பதற்கு எல்லா வீதிகளிலும் 2.50 லட்சம் சி.சி.டி.வி கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொறுத்தப்பட்ட மாநகரம் சென்னை.

இதனால் குற்றங்கள் நடைபெறுவது உடனுக்குடன் கண்டுபிடிக்கப்பட்டு சரியான தண்டனை பெற்றுத் தரப்படுகிறது. இப்படி சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பதில் அம்மாவின் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எந்த ஒரு மாநிலம் சட்டம் ஒழுங்கில் சிறந்து விளங்குகிறதோ, அங்கு தொழில் வளர்ச்சி பெறும் மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள்.

தி.மு.க தலைவர், அ.தி.மு.க அரசில் ஒன்றுமே நடக்கவில்லை என்று பொய் பிரசாரம் செய்து வருகிறார். நாங்கள் சென்னை மாநகர மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். ஸ்டாலின் சென்னை மாநகராட்சியின் மேயராக இருந்தார். சென்னை மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதுதான் மேயரின் வேலை. ஐந்து ஆண்டு காலம் எந்தப் பணியையும் செய்யவில்லை. மக்களையும் பார்க்கவில்லை, சென்னை மாநகரத்தின் குறைகளையும் தீர்க்கவில்லை.

ஆனால் சட்டமன்றத்தில் ஸ்டாலின் பேசும்போது சென்னையில் எங்கெங்கு எல்லாம் மழைநீர் தேங்கி நிற்கிறது என்று பேசுகிறார். ஆனால் அவர் இருக்கின்றபோது அந்தப் பணிகளை எல்லாம் பார்க்கவில்லை. ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் இருந்தார். அப்போதாவது சென்னை மாநகர மக்களின் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்திருக்கலாம். அப்போதும் செய்யவில்லை.

அம்மா இருந்த காலத்திலும், அம்மாவின் அரசு காலத்திலும் மழை மற்றும் புயல் காரணமாக சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றுவதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரத்தில் மட்டும் மழை நீர் கால்வாய் 954 கிலோ மீட்டர் நீள சாலைகளுக்கு கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகரில் 3000 இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதனால் மக்கள் பாதிக்கப்பட்டார்கள். ஆனால் தற்போது 33 இடங்களில் தான் தண்ணீர் தேங்க கூடிய நிலை இருக்கிறது. அதையும் வெளியேற்றுவதற்கு அம்மாவுடைய அரசு திட்டம் தீட்டி செயல்படுத்தி வருகிறது.

மழை மற்றும் புயல் வந்தாலும் மக்களுக்கு தடையில்லா மின்சாரம் கொடுக்க வேண்டும் என்பதற்காக அம்மாவுடைய அரசு பூமிக்கு அடியில் மின்பாதை அமைத்து கேபிள் மூலம் மின்சாரம் கொடுக்கின்றோம். இந்த மயிலாப்பூர் தொகுதியிலும் கொடுத்திருக்கிறோம். சென்னை மாநகரம் போக்குவரத்து நெரிசல் மிக்க மாநகரம்.

எனவே போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக அம்மா மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வந்து செயல்படுத்தினார்கள். இப்போது 2000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாம் கட்டம் மத்திய அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார்.

இந்த திட்டம் எல்லாம் நிறைவேறும்போது சென்னை மாநகரில் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு மக்கள் எளிதாக போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பயணிக்கலாம்.

புரட்சித் தலைவி அம்மா வாழ்ந்த வேதா இல்லத்தை அம்மா நினைவு இல்லமாக மாற்றப்பட்டு இருக்கிறது. அம்மாவின் நினைவாக அம்மாவின் அரசு மெரினா கடற்கரையில் பீனிக்ஸ் பறவை வடிவில் அருமையான நினைவு மண்டபத்தை அமைத்திருக்கிறோம். ஏழை எளிய மக்கள் ஏற்றம் பெற தன் வாழ்வையே அர்ப்பணித்த புரட்சித்தலைவி அம்மாவின் நினைவாக இந்த சிறப்பு வாய்ந்த நினைவு மண்டபத்தை அமைத்து திறந்திருக்கிறோம்.

அம்மா நினைவிடத்தில் புரட்சித் தலைவி அம்மாவின் வாழ்க்கை வரலாற்றை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அறிவுசார் பூங்கா அமைத்திருக்கிறோம். அம்மாவுக்கு காமராஜர் சாலையில் உள்ள உயர்கல்வி வளாகத்தில் முழுவுருவ வெண்கலச் சிலை அமைத்திருக்கிறோம். அதுபோல அம்மாவின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்திருக்கிறோம்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நினைவிடத்தை சீர்செய்து அவருக்கும் பெருமை சேர்த்திருக்கின்றோம். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நூற்றாணடு விழாவையொட்டி காமராஜர் சாலையில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நினைவு வளைவும் அமைத்து திறந்திருக்கிறோம்.

சென்னை சென்ட்ரலுக்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் பெயரை சூட்டி யிருக்கிறோம். புரட்சித் தலைவி அம்மாவுக்கு பெருமை சேர்க்கும் விதமாக சட்டப்பேரவை வளாகத்தில் புரட்சித் தலைவி அம்மாவின் திருவுருவ படத்தை திறந்திருக்கின்றோம். இப்படி எங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்காக பாடுபட்ட அந்த இருபெரும் தலைவர்களுக்கு நாங்கள் மரியாதை செய்திருக்கின்றோம்.

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருக்கிறோம். எல்லா அரிசி அட்டை குடும்பதாரர்களுக்கும் ஒரு ஆண்டிற்கு விலையில்லாமல் 6 கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும். இல்லத்தரசிகளின் குறைகளை குறைப்பதற்காக எல்லா அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லாமல் வாஷிங்மெஷின் வழங்கப்படும். ரே‌ஷன் பொருட்கள் அனைத்து இல்லங்களுக்கும் வீடு தேடி வந்து கொடுக்கப்படும். கேபிள் டிவி இணைப்பு கட்டணமில்லாமல் கொடுக்கப்படும்.

18 வயது நிரம்பியவர்களுக்கு ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டு ஓட்டுநர் லைசென்ஸ் வழங்கப்படும். மாதந்தோறும் எல்லா அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கும் 1,500 ரூபாய் வழங்கப்படும். முதியோர் மற்றும் மாற்று திறனாளிகளின் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும். மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும்.

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சொந்தமாக புதிய ஆட்டோக்களை வாங்குவதற்கு 25,000 ரூபாய் மானியம் வழங்கப்படும். சென்னை மாநகரத்தில் வீடில்லாத ஏழை மக்களுக்கு அடுக்குமாடி கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். இவை அனைத்தும் அம்மாவின் அரசு மீண்டும் அமைந்தவுடன் நிறைவேற்றப்படும்.

வருகின்ற சட்டமன்ற தேர்தல் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: https://www.maalaimalar.com/news/topnews/2021/03/29161002/2482687/Tamil-News-Edappadi-Palaniswami-says-Chennai-safe.vpf