தமிழக அரசின் புதிய உத்தரவால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய சென்னை மெரினா, எலியட்ஸ் கடற்கரைகள் – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

தமிழக அரசின் புதிய உத்தரவால், சென்னை மெரினா, பெசன்ட்நகர் எலியட்ஸ், மாமல்லபுரம் கடற்கரைகள் நேற்று மக்கள் நடமாட்டமின்றி காணப்பட்டன.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கரோனா தொற்று பரவல் வேகமெடுத்துள்ளது. ஏற்கெனவே கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு அறிவித்திருந்த பல்வேறு கட்டுப்பாடுகள் கடந்த 10-ம் தேதி முதல் அமலுக்கு வந்த நிலையில், `சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள அனைத்து கடற்கரைப் பகுதிகளிலும் சனி, ஞாயிறு மற்றும் அனைத்து அரசு விடுமுறை நாட்களிலும் பொதுமக்கள் கூடுவது11-ம் தேதி முதல் தடை செய்யப்படுகிறது’ என புதிய கட்டுப்பாட்டை தமிழக அரசு அறிவித்தது.

அரசின் இந்த புதிய அறிவிப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமையான நேற்று காலை மெரினா கடற்கரையின் உட்புறச் சாலைக்குச் செல்லும் வழிகள் அனைத்தையும் போலீஸார் அடைத்திருந்தனர். அதேபோல, பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல முடியாத வகையில் தடுப்புகளை அமைத்தனர்.

இவ்விரு கடற்கரையிலும் காலையில் நடைபயிற்சி மேற்கொள்ள வந்தவர்கள் மற்றும் கடற்கரையில் பொழுதைக் கழிக்க வந்தவர்கள் அனைவரையும் போலீஸார் திருப்பி அனுப்பினர். இதன் காரணமாக நேற்று சென்னை மெரினா கடற்கரை, பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரைகள் மக்கள் நடமாட்டமின்றி காணப்பட்டன.

இதுகுறித்து மெரினா கடற்கரை வியாபாரிகள் கூறும்போது, “கரோனா பரவல் காரணமாக கடந்தஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட மெரினா கடற்கரையில் மக்கள் அனுமதிக்கப்பட்டும், சில மாதங்களுக்கு முன்புதான் கடைகளைத் திறக்க அனுமதித்திருந்தனர்.

கடந்த ஓராண்டாக வருவாய், வாழ்வாதாரத்தை இழந்து நாங்கள் தவித்த நிலையில், மக்கள் அதிகம் வரக்கூடிய நாட்களில் கடற்கரையை மூட அரசு முடிவெடுத்திருப்பது, மெரினா கடற்கரையை நம்பியிருக்கும் 1,000-க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு வேதனையைக் கொடுத்துள்ளது” என்றனர்.

தமிழக அரசு கரோனா தொற்றுதடுப்பு நடவடிக்கையாக சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள்கடற்கரைக்குச் செல்ல தடை விதித்துள்ளதால், மாமல்லபுரத்தில் கடற்கரைக்குச் செல்லும் பாதைகளை பேரூராட்சி நிர்வாகம், போலீஸார் தடுப்புகள் அமைத்து மூடியுள்ளனர்.

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/657933-chennai-beaches.html