உதகை குதிரை பந்தயங்கள் ஏப். 14-ல் தொடக்கம்; கரோனா பரவல் காரணமாக பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

கோடை விழாவின் ஆரம்பமாக, உதகையில் குதிரை பந்தயங்கள் நாளை மறுநாள் (ஏப்ரல் 14) தொடங்குகிறது. கரோனா பரவல் காரணமாக முதன்முறையாக இந்தாண்டு பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோடை சீசனின் போது நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கவர பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு அன்று தொடங்கி, ஜூன் மாதம் வரை மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் உதகையில் குதிரை பந்தயங்கள் நடத்தப்படுகின்றன.

இந்தாண்டு 134-வது குதிரை பந்தயம் நாளை மறுநாள் (ஏப்ரல் 14) தெடாங்கி ஜூன் மாதம் 11-ம் தேதி வரை இரண்டு மாதங்கள் நடக்கின்றன. இதற்காக பெங்களூரு, சென்னை, பூனா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து 500 பந்தய குதிரைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கரோனா பரவல் காரணமாக அரசின் அறிவுறுத்தலின் பேரில், இந்தாண்டு முதன்முறையாக பார்வையாளர்கள் இல்லாமல் குதிரை பந்தயங்கள் நடக்கும் என, மெட்ராஸ் ரேஸ் கிளப் முதன்மை செயல் அலுவலர் டி.ராமன் தெரிவித்துள்ளார்.

முக்கிய பந்தயமான ‘நீலகிரி டர்பி’ மே 21-ம் தேதியும் ‘நீலகிரி தங்க கோப்பை’ போட்டி மே 22-ம் தேதியும் நடக்கின்றன.

இது குறித்து, மெட்ராஸ் ரேஸ் கிளப் முதன்மை செயல் அலுவலர் டி.ராமன் கூறுகையில், “ஆண்டுதோறும் மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் உதகையில் குதிரை பந்தயங்கள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ் புத்தாண்டு தினத்தன்று தொடங்கி ஜூன் மாதம் வரை இப்போட்டிகள் நடத்தப்படுகிறது. 500 குதிரைகள் போட்டியில் கலந்துகொள்கின்றன. 5 வெளியூர் பயிற்சியாளர்கள் உட்பட 26 குதிரை பயிற்சியாளர்கள் மற்றும் 50 ஜாக்கிகள் கலந்துகொள்கின்றனர்.

கடந்தாண்டு கரோனா காரணமாக குதிரை பந்தயங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்தாண்டு, அரசு அறிவுறுத்தலின்படி பார்வையாளர்கள் இல்லாமல் பந்தயங்கள் நடக்கும். மொத்தம் 18 நாட்கள் பந்தயங்கள் வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பந்தயங்கள் நடக்கும்.

முக்கிய பந்தயங்களான ‘தி நீல்கிரிஸ் 1000 கீனிஸ்’ கிரேட் 3 மே 7-ம் தேதியும், ‘தி நீல்கிரிஸ் 2000 கீனிஸ்’ கிரேட் 3 போட்டி மே 8-ம் தேதியும், ‘தி நீல்கிரிஸ் டர்பி ஸ்டேக்ஸ்’ கிரேட் 1 போட்டிகள் மே மாதம் 21-ம் தேதியும் நடக்கின்றன.

இது தவிர, உதகையில் நடக்கும் முக்கிய போட்டியான ‘நீலகிரி தங்க கோப்பை’ போட்டி மே மாதம் 22-ம் தேதி நடத்தப்படுகிறது” என்றார்.

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/658069-horse-race-in-nilgiris.html