போதிய பயணிகள் இல்லாததால் 18 சென்னை விமானங்கள் ரத்து – மாலை மலர்

சென்னைச் செய்திகள்

சென்னையில் இருந்து வெளிமாநிலங்கள், மாவட்டத்திற்கு ஒரு நாளுக்கு 13 ஆயிரத்திலிருந்து 14 ஆயிரம் பேர் பயணித்தனர்.

ஆலந்தூர்:

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து சென்னை வந்த உள்நாட்டு விமானங்களில் நாள் ஒன்றுக்கு சுமார் 15 ஆயிரம் பேர் வந்தனர்.

கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக இது தற்போது குறைந்து நேற்று சுமார் 5,500 பேர் மட்டுமே வந்தனர்.

இதைப்போல் சென்னையில் இருந்து வெளிமாநிலங்கள், மாவட்டத்திற்கு ஒரு நாளுக்கு 13 ஆயிரத்திலிருந்து 14 ஆயிரம் பேர் பயணித்தனர். தற்போது அது குறைந்து நேற்று சுமார் 6,500 பேர் மட்டுமே பயணித்தனர்.

இந்த நிலையில் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் நேற்று பல விமானங்கள் போதிய பயணிகள் இல்லாமல் இயக்கப்பட்டன.

பெங்களூரில் இருந்து வந்த 2 விமானங்களில் 18 பயணிகளும், ராய்ப்பூரில் இருந்து வந்த விமானத்தில் 3 பயணிகளும், மங்களூர் மற்றும் கோவை விமானங்களில் தலா 5 பயணிகளும், கோழிக்கோட்டிலிருந்து வந்த விமானத்தில் 7 பயணிகளும், ஐதராபாத்தில் இருந்து வந்த விமானத்தில் 8 பயணிகளும், மைசூரில் இருந்து வந்த விமானத்தில் 9 பயணிகள் மட்டுமே பயணித்தனர்.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து மும்பை செல்ல வேண்டிய 3 விமானங்கள், ஐதராபாத் செல்ல வேண்டிய 3 விமானங்கள், பெங்களூர்-1, மதுரை-1, பாட்னா-1 ஆகிய 9 விமானங்கள், அதைப்போல் சென்னைக்கு திரும்பி வரவேண்டிய இந்த 9 விமானங்கள் என மொத்தம் 18 விமானங்கள் போதிய பயணிகள் இல்லாமல் நேற்று ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

[embedded content]

Source: https://www.maalaimalar.com/news/district/2021/04/14170923/2536246/Tamil-news-18-Chennai-flights-canceled-due-to-lack.vpf