அடேங்கப்பா! 6 நாட்களில் ரூ 10 லட்சம் வசூல்.. கொரோனா விதிமுறைகள்.. அதிரடி காட்டும் சென்னை போலீஸ் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: கொரோனா விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாதவர்களிடம் இருந்து கடந்த 6 நாட்களில் தலைநகர் சென்னையில் மட்டும் சுமார் 9.74 லட்ச ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகக் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று மட்டும் புதிதாகத் தமிழகத்தில் 7,819 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

அதேபோல மாநிலத்தில் கொரோனாவால் நேற்று 25 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் தற்போது 54,315 பேர் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா இரண்டாம் அலை முதல் அலையைவிட மிக மோசமாக உள்ளது.

புதிய கட்டுப்பாடுகள்

கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், மாநிலத்தில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. பேருந்து பயணங்களில் கட்டுப்பாடுகள், வெளிநாடுகளில் இருந்து திரும்புபவர்களுக்கு இபாஸ் கட்டாயம், வழிபாட்டுத் தலங்களுக்கு நேரக் கட்டுப்பாடு, மால் மற்றும் திரையரங்குகளில் கட்டுப்பாடு எனப் பல புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன.

போலீசார் அபராதம்

இவை அனைத்தும் கடந்த சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்தது. மேலும், கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றாதவர்களிடம் அபராதம் வசூலிக்கும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது. மாநிலத்தில் மாஸ்க் அணியாதவர்களிடம் இருந்து 200 ரூபாயும் தனிமனித இடைவெளியைப் பின்பற்றாத நபர்களிடம் 500 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.

சென்னையில் ரூ, 9.73 லட்சம் வசூல்

சென்னையில் மாஸ்க் அணியாமல் சுற்றியவர்கள் மீது நேற்று முன்தினம் 1,284 வழக்குகள் பதியப்பட்டுட்டுள்ளது. இவர்களிடம் இருந்து ரூபாய் 2,56,800 வசூலிக்கப்பட்டுள்ளது. மொத்தமாகக் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தலைநகர் சென்னையில் அபராத தொகையாக 9,74, 800 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றாத நபர்கள் மீது 4, 874 வழக்குகளும் சென்னை காவல் துறை சார்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

2.20 லட்சம் வழக்குகள்

தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மாஸ்க் அணியாமல் சுற்றியவர்கள் மீது 2,20,806 பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தனி மனித இடைவெளியை முறையாகப் பின்பற்றாதவர்கள் மீது ஒரு வாரத்தில் 9,007 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக 13ஆம் தேதி மட்டும் மாநிலத்தில் 45,049 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

Source: https://tamil.oneindia.com/news/chennai/rs-9-74-lakhs-collected-as-fine-in-chennai-alone-for-not-following-corona-rules-417875.html