சென்னை: விபத்து வழக்கில் திடீர் திருப்பம்! – சிசிடிவியால் தப்பிய லாரி டிரைவர் – Vikatan

சென்னைச் செய்திகள்

சென்னை, திருவொற்றியூர் கல்யாண செட்டி நகரைச் சேர்ந்தவர் வினோத் (25). இவர் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றிவந்தார். திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் சந்திப்பு அருகே எண்ணூர் விரைவு சாலையில் கன்டெய்னர் லாரியில் சிக்கி உயிரிழந்தார். இது குறித்து வண்ணாரப்பேட்டை போக்குவரத்து போலீஸார், வினோத்தின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்தச் சம்பவத்தில் கன்டெய்னர் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். அவரைப் போக்குவரத்து பிரிவு போலீஸார் தேடிவந்தனர். இந்தச் சூழலில் சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வுசெய்தனர். அப்போது சாலையின் தடுப்புச் சுவரைத் தாண்டி வினோத் நடந்து வரும் காட்சி பதிவாகியிருந்தது. அதன் பிறகு அவர், அந்த வழியாக வரும் கன்டெய்னர் லாரியின் முன்சக்கரம் கடந்த சூழலில் பின்சக்கரத்துக்கு இடையே சாலையில் படுக்கும் காட்சி பதிவாகியிருந்தது. அதைப் பார்த்த போலீஸார், வினோத் சாலை விபத்தில் இறக்கவில்லை என்று முடிவுக்கு வந்தனர். மேலும், அவர் லாரியின் சக்கரத்தில் விழுந்து தற்கொலை செய்வதையும் போலீஸார் உறுதிப்படுத்தினர். இதையடுத்து இந்த வழக்கை போக்குவரத்து போலீஸார் சிசிடிவி காட்சி ஆதாரம் அடிப்படையில் திருவொற்றியூர் சட்டம் ஒழுங்கு பிரிவு போலீஸாருக்கு மாற்றியிருக்கின்றனர். இதையடுத்து திருவொற்றியூர் போலீஸார், எதற்காக வினோத் தற்கொலை செய்துகொண்டார் என்று விசாரித்துவருகின்றனர். இந்தச் சிசிடிவி காட்சி சரியான நேரத்தில் வெளியானதால் விபத்து வழக்கிலிருந்து லாரி டிரைவர் தப்பியதாக போலீஸார் தெரிவித்தனர்.

தற்போது இந்த சிசிடிவி சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.

Source: https://www.vikatan.com/news/accident/accident-case-transferred-to-suicide-case-in-chennai