சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் குவியும் வட மாநில தொழிலாளர்கள் – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் குவியும் வட மாநில தொழிலாளர்கள். ரெயிலுக்காக காத்து இருக்கிறார்கள்.

சென்னை

தமிழகத்தில் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள்.

உத்தரபிரதேசம், பீகார், ஒடிசா, மேற்குவங்காளம், அசாம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் இருந்து தான் பெருவாரியான தொழிலாளர்கள் வருகிறார்கள். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

இது தவிர ஓட்டல்கள், மால்கள், தங்கும் விடுதிகள், உள்அலங்கார வேலைகள், டெய்லரிங் என்று வட மாநில தொழிலாளர்கள் வேலை பார்க்காத இடங்களே இல்லை என்று சொல்லும் வகையில் தமிழகம் முழுவதும் அவர்கள் வேலை பார்க்கிறார்கள்.

தமிழகத்தை பொறுத்தவரை வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. அவ்வாறு கிடைத்தாலும் சம்பளம் அதிகம், குறித்த நேரம் மட்டுமே வேலை பார்ப்பார்கள் என்ற எண்ணம் உள்ளது.

வட மாநில தொழிலாளர்களை பொறுத்தவரை சம்பளம் 25 சதவீதம் வரை குறைவாக உள்ளது. அதிகம் நேரம் வேலை பார்க்கிறார்கள். தங்குவதற்கு இடம் கொடுத்தால் போதும் தடங்கல் இல்லாமல் வேலை நடக்கும். குறிப்பிட்ட காலத்துக்குள் வேலை முடிந்து விடும் என்பதால் வடமாநில தொழிலாளர்களை விரும்புகிறார்கள்.

கடந்த ஆண்டு ஊரடங்கு அமலுக்கு வந்தபாது இவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். பலர் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் திண்டாடினார்கள். நடந்தே ஊர்களுக்கு புறப்பட்ட சம்பவங்களும் நடந்தது.

அப்போது  கட்டுமான தொழில்கள்  கடுமையாக பாதித்தது. ஊரடங்கை தளர்த்திய பிறகும் பலர் திரும்பி வராததால் எல்லா தொழில்களும் முடங்கியது.

அதன் பிறகு வட மாநிலங்களில் இருந்து தனி பஸ்கள் மூலம் அவர்களை அழைத்து வந்தார்கள். இதனால் மீண்டும் தொழில்கள் வேகமாக நடந்தன.

இப்போது மீண்டும் கொரோனா கட்டுப்பாடு மற்றும் அதிகமாக பரவி வரும் கொரோனா காரணமாக வட மாநில தொழிலாளர்கள் கலக்கம் அடைந்துள்ளார்கள்.

கூட்டம் கூட்டமாக ஊருக்கு படையெடுக்கிறார்கள். சென்னை சென்ட்ரலில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் ரெயில்கள் நிரம்பி வழிகின்றன. ரெயிலுக்காக ஏராளமானவர்கள் ரெயில் நிலையங்களில் காத்து இருக்கிறார்கள்.

Source: https://www.dailythanthi.com/News/State/2021/04/19152938/Northern-state-workers-pile-up-at-Chennai-Central.vpf