மஹாவீர் ஜெயந்தி; இறைச்சிக் கடைகள் மூடல்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

அரசு உத்தரவின்படி மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, சென்னையில் அனைத்து இறைச்சிக் கூடங்களும் ஏப்ரல் 25-ம் தேதி அன்று மூடப்பட வேண்டும் என ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“பெருநகர சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத்துறை (கால்நடை மருத்துவப்பிரிவு) கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சிக் கூடங்கள் அனைத்தும் வருகின்ற 25.04.2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அரசு உத்தரவின்படி மூடப்படுகின்றன.

இதேபோல் ஆடு, மாடு, இதர இறைச்சிக் கடைகளில் இறைச்சி விற்பனை செய்வதற்கும், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் பதப்படுத்திய இறைச்சி விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது.

எனவே, அரசு உத்தரவின்படி கண்டிப்பாக ஏப்ரல் 25 (ஞாயிற்றுக்கிழமை) அன்று முழுவதும் அனைத்து இறைச்சிக் கடைகள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் இறைச்சி விற்பனை செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, அரசு உத்தரவினைச் செயல்படுத்த வியாபாரிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்”.

இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஏற்கெனவே ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளது. அன்று எந்தக் கடைகளும் திறக்கக் கூடாது என உத்தரவு உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/662134-mahaveer-jayanti-closure-of-meat-shops-in-chennai-chennai-corporation-announcement.html