இதிலும் முத்திரை பதிக்கிறது சென்னை ஐகோர்ட்டு! – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

“பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம். எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி” என்று பாரதியார் பாடினார் அன்று.

“பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம். எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி” என்று பாரதியார் பாடினார் அன்று. அந்தவகையில், பெண்கள் முன்னேற்றத்திற்கு தமிழ்நாடு, நீண்ட நெடுங்காலமாக பாடுபட்டு வந்திருக்கிறது. இதில், தந்தை பெரியாரின் அளப்பரிய பங்கை யாரும் மறுத்துவிடமுடியாது. பெண்களுக்கு எல்லா துறையிலும் விடுதலை வேண்டும், உயர்வு வேண்டும் என்பதை தன்னுடைய முக்கிய நோக்கமாக கொண்டு செயல்பட்டவர், பெரியார்.

அந்தவகையில், தமிழ்நாட்டில் இப்போது உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. அதுபோல, அரசுப் பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இப்போது, தி.மு.க., அ.தி.மு.க. இரு கட்சிகளும் வெளியிட்ட தேர்தல் அறிக்கைகளில், அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு இப்போதுள்ள 30 சதவீத இடஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆக, மே 2-ந்தேதிக்கு பிறகு ஆட்சியமைக்கப் போகும் அரசு நிச்சயமாக அரசுப் பணிகளில் பெண்களுக்கு 40 சதவீத இடஒதுக்கீடு வழங்கும்.

தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் எல்லாத் துறைகளிலும் பெண்களுக்கு நல்ல பிரதிநிதித்துவம் இருக்கிறது. அதுபோல, சென்னை ஐகோர்ட்டிலும் தற்போது மொத்தமுள்ள 75 நீதிபதிகள் பணியிடங்களில் 62 நீதிபதிகள் பணியாற்றுகிறார்கள். இதில், புஷ்பா சத்தியநாராயணா, வி.எம்.வேலுமணி, ஜெ.நிஷா பானு, அனிதா சுமந்த், பவானி சுப்பராயன், ஆர்.தாரணி, டி.கிருஷ்ணவள்ளி, ஆர்.ஹேமலதா, பி.டி.ஆஷா, எஸ்.ஆனந்தி, எஸ்.கண்ணம்மாள், ஆர்.என்.மஞ்சுளா, டி.வி.தமிழ்செல்வி ஆகிய 13 பெண் நீதிபதிகள் நீதி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஐகோர்ட்டுகளில் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 1,080 ஆகும். ஆனால், தற்போது 661 நீதிபதிகள்தான் பணியாற்றுகிறார்கள். அனைத்து மாநிலங்களில் உள்ள ஐகோர்ட்டுகளையும் சேர்த்துப்பார்த்தால், அங்கு பணிபுரியும் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 73 தான். அதிலும், 13 பெண் நீதிபதிகள் சென்னை ஐகோர்ட்டில்தான் பணிபுரிகிறார்கள். இந்தியாவிலேயே அதிக பெண் நீதிபதிகளை கொண்டது, சென்னை ஐகோர்ட்டுதான்.

ஏற்கனவே, மிகப்பழமை வாய்ந்த ஐகோர்ட்டு என்ற சென்னை ஐகோர்ட்டு கிரீடத்தில் இது மேலும் ஒரு ஒளிவீசும் வைரக்கல்லாகும். முதல் முதலாக 1987-ம் ஆண்டில்தான், பின்நாட்களில் தமிழகத்தின் கவர்னராக வந்த பாத்திமா பீவி பெண் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தற்போது, சுப்ரீம் கோர்ட்டில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி ஒருவர்தான் பெண் நீதிபதியாக இருக்கிறார்.

பெண்களின் பிரச்சினைகளை விசாரிப்பதற்கு, பெண் நீதிபதிகள் இருந்தால் நல்லது என்ற வகையிலும், ஆண்களுக்கு சரிசமமாக எல்லா இடங்களிலும், பெண்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கவேண்டும் என்ற அடிப்படையிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் கூடுதலாக பெண் நீதிபதிகள் நியமிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு பெண் வழக்கறிஞர்கள் சங்கம் விடுத்துள்ளது.

இது தொடர்பாக, அவர்கள் தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதமும் எழுதியிருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்த ஒரு வழக்கில் இதையும் குறிப்பிட்டுள்ளனர். “ஏறத்தாழ 100 ஆண்டுகளாக பெண்கள் வக்கீல்களாக பணியாற்ற வாய்ப்பு பெற்றுள்ள நிலையில், ஐகோர்ட்டுகளிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் போதிய அளவு பெண் நீதிபதிகள் இல்லை. ஆனால், 71 ஆண்டுகளாக இயங்கும் சுப்ரீம் கோர்ட்டில், இதுவரை 247 நீதிபதிகள் பணியாற்றி இருக்கிறார்கள். இந்த 71 ஆண்டுகளிலும், இதுவரை 8 பெண் நீதிபதிகள்தான் பணியாற்றி இருக்கிறார்கள். தற்போது ஒருவர் மட்டுமே உள்ளார். ஐகோர்ட்டுகளில் மொத்தமுள்ள நீதிபதிகள் எண்ணிக்கையில் 11 சதவீதம் பேர்தான் பெண் நீதிபதிகளாக இருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளனர்.

எனவே, மத்திய அரசாங்கமும், சுப்ரீம் கோர்ட்டும், சென்னை ஐகோர்ட்டு காட்டிய வழியை பின்பற்றி, சுப்ரீம் கோர்ட்டிலும், கூடுதலாக பெண் நீதிபதிகள் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை இப்போது வலுத்து வருகிறது. இது நியாயமான கோரிக்கை, பரிசீலிக்கப்பட வேண்டும்.

Source: https://www.dailythanthi.com/Others/Thalayangam/2021/04/27050814/Chennai-iCourt-stamps-on-this-too.vpf