தனியார் மருத்துவமனைகள், விடுதிகள், கரோனா பாதுகாப்பு மையங்களைத் தொடங்கலாம்; பிரத்யேக அனுமதி தேவையில்லை: சென்னை மாநகராட்சி – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னையில் தனியார் மருத்துவமனைகள், விடுதிகள் கரோனா பாதுகாப்பு மையங்களைக் தொடங்கலாம். இதற்கு பிரத்யேக அனுமதி தேவையில்லை என, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் காய்ச்சலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாளொன்றுக்கு 4,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் 12 கரோனா வைரஸ் தொற்றுப் பரிசோதனை மையங்கள் மூலம் உரிய பரிசோதனைகள் மேற்கொண்டு, மருத்துவமனை சிகிச்சை, கோவிட் பாதுகாப்பு மையங்களில் சிகிச்சை அல்லது அவர்களின் வீட்டிலோ தனிமைப்படுத்திக் கொள்ளும் வசதி ஆகிய முறைகளில் ஒரு வழியில் கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சேவை அளிக்கப்பட்டு வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் 14 கோவிட் பாதுகாப்பு மையங்கள் உள்ளன. இங்கு, மிகக்குறைந்த தொற்று பாதிப்பு உள்ளவர்களுக்கும் மற்றும் அரசு மருத்துவமனை மூலம் பரிந்துரைக்கப்படுபவர்களுக்கும் போதுமான மருத்துவ வசதிகளுடன் சிகிச்சை அளிக்க வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கவும், வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் வசிப்பிடத்திற்கு அருகிலேயே சிகிச்சை பெறும் பொருட்டும் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள விருப்பமுள்ள மற்றும் சிகிச்சை அளிக்க போதிய உட்கட்டமைப்பு வசதியுள்ள தனியார் மருத்துவமனைகள் தனியாகவோ அல்லது பிற தங்கும் விடுதிகளுடன் இணைந்தோ கரோனா வைரஸ் தொற்று பாதுகாப்பு மையங்களை ஆரம்பிக்க சில தினங்களுக்கு முன் பெருநகர சென்னை மாநகராட்சி அனுமதி அளித்தது.

அவ்வாறு கரோனா வைரஸ் தொற்று பாதுகாப்பு மையங்கள் தொடங்க விருப்பமுள்ள மருத்துவமனைகள், படுக்கை வசதி, மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ வசதிகள் உள்ளிட்ட விவரங்களுடன் கூடுதல் மாநகர நல அலுவலரை (தலைமையகம்) (94450 26050) அணுகலாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.

இந்நிலையில், இத்தகைய கோவிட் பாதுகாப்பு மையங்களைத் தொடங்க தனியாக அனுமதி தேவையில்லை எனவும், மாநகராட்சி அலுவலக அதிகாரிக்கு இ-மெயில் மூலம் தகவல் தெரிவித்துவிட்டு சிகிச்சை மையம் தொடங்கலாம் எனவும் இன்று (ஏப். 28) சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/664656-chennai-corporation-on-covid-care-centres.html