சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் முழு ஊரடங்கு?- 7 மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன் தலைமைச் செயலர் ஆலோசனை – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை குறையாமல் அதிகரித்து வருவதை அடுத்து, தொற்றுப் பரவலைத் தடுக்க அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க சென்னை உள்ளிட்ட 7 மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன் இன்று தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்தியா முழுவதும் கரோனா தொற்றுப் பரவல் இரண்டாவது அலை மார்ச் முதல் வாரத்திலிருந்து ஏப்ரல் முதல் வாரம் வரை மும்மடங்கு வேகத்தில் அதிகரித்தது. தற்போது அது மேலும் அதிக வேகத்தில் பரவி வருகிறது. தமிழகத்தில் தினசரி தொற்று எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி 16,665 எனவும், சென்னையின் தினசரி தொற்று எண்ணிக்கை 4,764 எனவும் உள்ளது.

தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில், வீடுகளில் தனிமைப்படுத்துதலில் உள்ளோர் எண்ணிக்கை 1,10,308 பேர். இது தொடர்ந்து தினமும் அதிகரித்து வருகிறது. தொற்று ஏற்படுபவர்கள் சதவீதமும் அதிகரித்து வருகிறது. முதல் பரவலில் மொத்தத் தொற்றில் சென்னை 50% வரை இருந்தது. இம்முறை மொத்தத் தொற்றில் சென்னை 28% வரை உள்ளதும், மற்ற மாநிலங்கள் 72% தொற்றுள்ளோரால் நிரம்பியுள்ளதும் மாநிலம் முழுவதும் பரவலாக பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் தொற்றால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, காஞ்சிபுரம், சேலம் அடுத்து திருப்பூர், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது. சில மாவட்டங்களில் தொற்றின் வேகம் அதிகமாக உள்ளது.

அதிகரித்து வரும் கரோனாவைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி பேணுதல், நோயுற்றவர்களைத் தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட முக்கியத் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரப்பட்டாலும் பொதுமக்கள் பெரும்பாலானோர் இதைக் கடைப்பிடிப்பதில்லை என்ற கருத்தும் எழுந்துள்ளது. சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு மட்டுமே தொற்றைக் கட்டுப்படுத்தும் என்கிற கருத்தும் எழுந்துள்ளது.

இந்தியா முழுவதும் 150 மாவட்டங்களில் ஊரடங்கை அமல்படுத்த மத்திய சுகாதாரத்துறை முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியகியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அதிகரித்து வரும் கரோனா தொற்று, படுக்கைகள் தேவை, ஆக்சிஜன் கையிருப்பு, தடுப்பூசி திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் ஆளுநரைச் சந்தித்து நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் இன்று காலை தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன், தொற்று அதிக வேகத்தில் பரவும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தேனி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனையைத் தொடங்கினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத்துறைச் செயலர், வருவாய் நிர்வாக ஆணையர், டிஜிபி, சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

இதன் பின்னர் மருத்துவ நிபுணர்களுடன் தலைமைச் செயலர் ஆலோசனை நடத்த உள்ளார். மேற்கண்ட 7 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலாகும் எனத் தெரிகிறது. ஏற்கெனவே இரவு நேர முழு ஊரடங்கு, கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் அது மற்ற மாவட்டங்களில் தொடரும் எனவும், மேற்கண்ட 7 மாவட்டங்களில் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமலாகலாம் என்றும் கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு இன்று மாலை வெளியாக வாய்ப்புள்ளது.

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/665017-full-curfew-in-7-districts-including-chennai-chief-secretary-consults-with-7-district-collectors-and-medical-experts.html