ராயபுரத்தில் அதிமுகவின் தொடர் வெற்றிக்கு ஸ்பீடு பிரேக்… சென்னை திமுக அலையில் சிக்கிய ஜெயக்குமார்! – Asianet News Tamil

சென்னைச் செய்திகள்

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி / முன்னிலையில் இருந்து வருகிறது. அதிமுக கூட்டணி 75 தொகுதிகளில் வெற்றி / முன்னிலை வகித்துவருகிறது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க உள்ளது. இந்தத் தேர்தலில் சென்னையில் உள்ள 16 தொகுதிகளிமும் திமுகவே வெற்றி பெற்று சாதனை படைத்ததோடு, சென்னை திமுகவின் அசைக்க முடியாத கோட்டை என்பதை நிரூபித்துள்ளது.
என்னதான் சென்னையில் திமுக கோலோச்சினாலும் ராயபுரத்தில் தனிப்பட்ட செல்வாக்கால் அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்து வெற்றி பெற்று வந்தார். 1991-இல் முதன் முறையாக வெற்றி பெற்ற ஜெயக்குமார், 1996-ஆம் ஆண்டு தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தவிர்த்து 2001, 2006, 2011, 2016 ஆகிய தேர்தல்களில் தொடர்ச்சியாக ஜெயக்குமார் வெற்றி பெற்று வந்தார். சென்னையில் இந்த முறையும் அதிமுக சார்பில் வெற்றி பெறும் தொகுதியாக ராயபுரம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 
சென்னை ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார் 27587 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ‘ஐட்ரீம்’ மூர்த்தியிடம் தோல்வியடைந்தார். இந்தத் தேர்தலில் ‘ஐட்ரீம்’ மூர்த்தி 68811 வாக்குகளும், ஜெயக்குமார் 36224 வாக்குகளும் பெற்றனர். சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் திமுகவே வெற்றி பெற்றது. சென்னையில் திமுகவுக்கு ஆதரவாக வீசிய அலையில் ராயபுரமும் அக்கட்சி வசம் கரை சேர்ந்தது.

Last Updated May 2, 2021, 10:52 PM IST

Source: https://tamil.asianetnews.com/politics/minister-jayakumar-lose-in-chennai-royapuram-assembly-segment-qshnaz