சென்னை போலீஸ் கமிஷனராக சங்கர் ஜிவால் பதவி ஏற்பு – மாலை மலர்

சென்னைச் செய்திகள்

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பதவி ஏற்றவுடன் தலைமை செயலாளர், முதல்-அமைச்சரின் தனிச்செயலாளர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர்.

சென்னை:

சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் மாற்றப்பட்டார். புதிய கமிஷனராக சங்கர் ஜிவால் பதவி ஏற்றார்.

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பதவி ஏற்றவுடன் தலைமை செயலாளர், முதல்-அமைச்சரின் தனிச்செயலாளர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர். வெ.இறையன்பு, புதிய தலைமை செயலாளராக பொறுப்பேற்றார்.

இந்தநிலையில் ‘சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் மாற்றப்பட்டு, புதிய கமிஷனராக ஆயுதப்படை கூடுதல் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் நியமிக்கப்படுகிறார்’ என்று தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் நேற்றுமுன்தினம் இரவு உத்தரவு பிறப்பித்தார்.

இதைத்தொடர்ந்து சங்கர் ஜிவால் நேற்று உடனடியாக சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து கமிஷனராக பதவி ஏற்றுக் கொண்டார். அவரிடம் முன்னாள் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் கோப்புகளை வழங்கி பொறுப்புகளை ஒப்படைத்தார். பின்னர் பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதைத்தொடர்ந்து சங்கர் ஜிவாலுக்கு போலீஸ் அதிகாரிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

சங்கர் ஜிவால், சென்னையின் 108-வது போலீஸ் கமிஷனர் ஆவார். இவர், உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். 1990-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக தமிழக போலீஸ துறையில் பணியில் சேர்ந்தார். மதுரை, கோவை உள்பட மாவட்டங்களில் போலீஸ் சூப்பிரண்டாக சிறப்பாக பணியாற்றினார்.

இவர், திருச்சி போலீஸ் கமிஷனராக இருந்தபோது பூட்டிய வீடுகளில் திருட்டை தடுக்கும் நடவடிக்கையாக எஸ்.எம்.எஸ். மூலம் கண்காணிப்பு திட்டத்தை செயல்படுத்தியவர். சந்தன கடத்தல் வீரப்பனை பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட ஈரோடு சத்தியமங்கலம் சிறப்பு அதிரடி காவல் படையில் 6 ஆண்டுகள் பணிபுரிந்தவர்.

இவர் 2004-2006-ம் ஆண்டு வரையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் தென் மண்டல இயக்குனராக பணியாற்றினார். அப்போது, நாட்டிலேயே தென்மண்டல கட்டுப்பாட்டில் அதிகமான ‘ஹெராயின்’ போதைபொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

சங்கர் ஜிவாலின் சிறந்த காவல் பணியை பாராட்டி கவுரவிக்கும் விதமாக அவருக்கு 2019-ம் ஆண்டு ஜனாதிபதியின் தகைசால் போலீஸ் பதக்கம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சென்னை போலீஸ் கமிஷனராக பதவியேற்ற பின்னர், சங்கர் ஜிவால் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் முன்கள பணியாளர்களான போலீசாரின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த மக்கள் நலத் திட்டங்களில் போலீசார் பங்கு சிறந்த முறையில் இருக்க வேண்டும். பொதுமக்கள் நிம்மதியாக இருக்க உறுதுணையாக இருப்போம். எனவே சென்னையில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் நடைபெறாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

சென்னையில் ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். கஞ்சா விற்பனை, கள்ளச்சந்தையில் ‘ரெம்டெசிவிர்‘ மருந்து விற்பனை செய்பவர்கள் மீது உளவுபிரிவு மூலம் கண்காணித்து துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குற்றச் சம்பவங்கள் அதிகம் நடைபெறும் ‘ஹாட் ஸ்பாட்’ பகுதியை கண்டறிந்து, அங்கு குற்றச்சம்பவங்களை தடுக்க தனிக்கவனம் செலுத்தப்படும். முழு ஊரடங்கில் மக்களின் அத்தியாவசிய தேவைகள் அறிந்து, அவர்கள் நலன் காக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஆனால் அதே நேரத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 1-ந்தேதி சென்னை போலீஸ் கமிஷனராக மகேஷ்குமார் அகர்வால் பதவியேற்றார். 9 மாதங்கள் அப்பதவியில் இருந்த அவர், நேற்று விடைபெற்று சென்றார். தற்போது அவருக்கு பணி எதுவும் வழங்காமல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: https://www.maalaimalar.com/news/district/2021/05/09084657/2621401/Tamil-News-Shankar-Jiwal-is-new-Chennai-Police-Commissioner.vpf