சென்னையில் முழு ஊரடங்கு: பொதுமக்கள், போலீஸாருக்கான வழிகாட்டி நடைமுறை வெளியீடு – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

கரோனோ நோய் தடுப்பு நடவடிக்கைக்காக தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கையொட்டி, சென்னை போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அறிவித்துள்ளனர். பொதுமக்கள், போலீஸார் கடைபிடிக்க வேண்டியது குறித்து சென்னை காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:

“1. சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 10.05.2021 அன்று காலை 4 மணி முதல் 24.05.2021 அன்று காலை 4 மணி வரை, தமிழக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது.

2. பாதுகாப்பு பணிக்காக மொத்தம் 10,000 காவல் ஆளிநர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

3. சென்னை பெருநகரில் 200 இடங்களில் சட்டம் ஒழுங்கு காவல் சார்பிலும், 118 இடங்களில் போக்குவரத்துக் காவல் சார்பிலும் வாகன தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

4. சென்னை பெருநகரம் முழுவதும் சுமார் 360 ரோந்து வாகனங்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

5. குறிப்பாக, அம்மா உணவகங்கள் மற்றும் நியாய விலைக் கடைகள் உட்பட பல்வேறு முக்கிய இடங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

6. மேலும், கோயம்பேடு மார்க்கெட், காசிமேடு மீன் மார்க்கெட் பகுதிகளில் அதிகளவு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

7. முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி பின்பற்றாதவர்கள் மீது காவல் துறையினரால் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

8. சென்னை பெருநகரம் முழுவதும் 35 மேம்பாலங்கள் மூடப்பட்டுள்ளன.

9. மேலும், போக்குவரத்துக் காவல் துறையினர், உரிய காரணங்களின்றி, வாகனங்களில் வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள 118 இடங்களில் வாகனத்தணிக்கை மேற்கொள்ளப்படும்.

10. பெருநகரம் முழுவதும் உள்ள முக்கிய சாலைகள் தவிர மற்ற சாலைகள் பாதுகாப்பு காரணங்களுக்காக தடுப்புகள் அமைத்து மூடப்பட்டு, வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது.

11. பொதுமக்களுக்கு கரோனா நோய் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு தொடர்பாக பொதுவான ஒலிப்பதிவு நாடா தயார் செய்து ஒலிபெருக்கி மூலம் விளம்பரப்படுத்தப்படுகிறது.

12. முழு ஊரடங்கின் போது காவல் துறையினர் கடைபிடிக்க வேண்டிய முக்கிய அறிவுரைகள் அடங்கிய தொகுப்பு சென்னை பெருநகர காவல் துறையினருக்கு அளிக்கப்படுகிறது. அவை:

* பொதுமக்களிடம் காவல் துறையினர் மிகுந்த கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். தற்காப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத பட்சத்தில், தடியடி அல்லது பலப்பிரயோகம் உபயோகிப்பது எந்த சூழ்நிலையிலும் ஈடுபடக்கூடாது.

* அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்து பணியில் ஈடுபட வேண்டும். கிருமி நாசினி கொண்டு தங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்து கொள்வதுடன், குறிப்பிட்ட இடைவெளியில் சோப்பு போட்டு கைகளை கழுவிக்கொள்ள வேண்டும்.

* ஊரடங்கு காலகட்டத்தில் பால், மளிகை பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றை எடுத்து செல்லும் வாகனங்கள் தடையின்றி செல்வதை உறுதி செய்தல் வேண்டும். மருத்துவ பொருட்கள் மற்றும் மருந்துகள், இதர உபகரணங்கள் ஆகியவன தடையின்றி எடுத்து செல்லப்படுவதை உறுதி செய்தல் வேண்டும்.

* முககவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளி கடைப்பிடித்தல் குறித்து ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், சென்னை நகரில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் குறித்து பெறப்பட்ட தகவல்களை பகிர வேண்டும்.

* வியாபாரிகளின் பிரதிநிதிகளோடு சரக உதவி ஆணையாளர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தி, சமூக இடைவெளி, முககவசம் அணிதல், 50% வாடிக்கையாளர்கள் அனுமதித்தல், நண்பகல் 12 மணிக்கு கடையை அடைத்தல், காவலர்களோடு ஒத்துழைப்பு நல்க அறிவுறுத்த வேண்டும்.

*வீடியோ மற்றும் நவீன முறையில் கரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

* கடற்கரை உள்ளிட்ட நீண்ட நிலபரப்புகளை ட்ரோன் கேமரா மூலம் பயனுள்ள வகையில் கண்காணிக்கலாம்.

* ஆக்சிஜன் சிலிண்டர் எடுத்துச் செல்லப்படும் வாகனங்கள் தடையின்றி செல்ல, சட்டம் ஒழுங்கு மற்றம் போக்குவரத்து காவலர்கள் தகுந்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

* வாகனத் தணிக்கை செய்யும்போது அத்தியாவசியப் பொருட்கள் எடுத்து செல்லும் வாகனங்களை தேவையின்றி நிறுத்தாமல் உடனடியாக அனுப்பி வைக்கவேண்டும். இதற்காக தனிப்பாதை அமைத்து தணிக்கை செய்யவேண்டும்.

* வாகனத் தணிக்கை செய்யும் காவலர்களுக்கு முகக் கவசம், முகக் தடுப்பு கவசம் மற்றும் கிருமி நாசினி வழங்கவேண்டும். வாகன தணிக்கை பணியில் ஈடுபடும் காவலர்கள் முககவசம் அணிந்தும், கிருமி நாசினி அல்லது சோப்பு கொண்டு சுத்தம் செய்தல் வேண்டும்.

* சென்னை பெருநகர அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகள் தங்கள் எல்லைகளில் சுற்றுக்காவல் பணியை தேவைக்கேற்ப செய்து எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேற்படி காவல் துறையினரின் பாதுகாப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்குமாறு காவல் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது”.

இவ்வாறு காவல்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/669217-publication-of-the-guide-practical-for-the-entire-curfew-public-and-police-in-chennai.html