சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனை முன் அணிவகுத்து நிற்கும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் – மாலை மலர்

சென்னைச் செய்திகள்

சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது. தமிழக சுகாதாரத்துறை அறிக்கையின்படி நேற்று மட்டும் தமிழகத்தில் புதிதாக 28,978 பேர் பாதிக்கப்பட்டனர். 20,904 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 232 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், 2-வது அலையில் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை என்பதால், இரண்டையும் ஏற்பாடு செய்வதில் புதிதாக அமைந்துள்ள அரசு திக்கமுக்காடுகிறது.

சென்னையில் நேற்று மட்டும் 7,149 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை 35,153 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அறிகுறி இல்லாதவர்கள், லேசான அறிகுறி உள்ளவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

என்றாலும், மருத்துவமனையில் சுமார் 10 ஆயிரம் பேராவது சிகிச்சை பெறும் நிலை உருவாகிறது. சென்னையில் ராஜிவ் காந்தி, ஸ்டான்லி, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைகள்தான் முக்கியமானவை. அதன்பின் சிறப்பு வார்டுகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

அரசு மருத்துவமனையில் நிரம்பி வழிகின்றன. இந்த நிலையில் சென்னை சென்ட்ரல் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை முன் நீண்ட வரிசையில் கொரோனா நோயாளிகளுடன் ஆம்புலன்ஸ் வாகனங்கள் அணிவகுத்து நின்கின்றன. படுக்கைகள் எப்போது கிடைக்கும் என ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே நோயாளிகள் பரிதவிக்கும் நிலை உருவாகியுள்ளது.

நேற்றுமுதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இதன் பயனாக கொரோனாவை கட்டுப்படுத்தி தினந்தோறும் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகும்போதுதான் படுக்கைகள் தட்டுப்பாடுக்கு தீர்வு கிடைக்கும்.

Related Tags :

[embedded content]

Source: https://www.maalaimalar.com/news/district/2021/05/11190644/2631916/Ambulnace-with-covid-patients-queue-front-chennai.vpf