சென்னையில் 400 காய்ச்சல் சிறப்பு முகாம்கள்; பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள் – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 400 காய்ச்சல் சிறப்பு முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என முதன்மை செயலாளர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி இன்று (மே 16) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று அறிகுறி உள்ள நபர்களை கண்டறிந்து பரிசோதனைகள் மேற்கொள்ள ஏதுவாக, கடந்த 08.05.2020 முதல் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் ஒரு வார்டுக்கு இரண்டு காய்ச்சல் முகாம்கள் என, 400 சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 08.05.2020 முதல் இதுநாள் வரை 1 லட்சத்து 29 ஆயிரத்து 324 முகாம்கள் நடத்தப்பட்டு, 65 லட்சத்து 92 ஆயிரத்து 859 நபர்கள் இம்முகாம்களில் பங்கு பெற்று பயனடைந்துள்ளனர். இவர்களில் 18 லட்சத்து 46 ஆயிரத்து 773 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த காய்ச்சல் சிறப்பு முகாம்களில் பொதுமக்களுக்கு உடல் வெப்பநிலை, உடலில் உள்ள ஆக்சிஜன் அளவும் பரிசோதனை செய்யப்படும். கரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகளான காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்ற அறிகுறி உள்ள நபர்களுக்கு தடவல் பரிசோதனை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.

மேலும், அறிகுறி உள்ள நபர்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் கரோனா வைரஸ் தொற்று பாதித்த நபரை கண்டறிந்து தனிமைப்படுத்தி தொற்று பரவுதலை கட்டுப்படுத்த முடியும்.

இந்த காய்ச்சல் முகாம்கள் கரோனா வைரஸ் நோய் தொற்று அதிகம் உள்ள இடங்கள் மற்றும் தொற்று அதிகம் பரவ வாய்ப்புள்ள இடங்களாக கருதப்படுகின்ற பகுதிகளில் அதிக அளவில் நடத்தப்படுகின்றன. இந்த காய்ச்சல் முகாமில் மருத்துவர், செவிலியர் மற்றும் உதவியாளர் ஆகியோர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க நியமிக்கப்பட்டுள்ளனர். 15 மண்டலங்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ள இந்திய ஆட்சி பணி அளவிலான கள ஒருங்கிணைப்பு அலுவலர்கள் இந்த காய்ச்சல் முகாம்களை கண்காணித்து வருகின்றனர்.

எனவே, கரோனா வைரஸ் தொற்று பரவுதலை கட்டுபடுத்த பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதிகளில் நடைபெறும் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்களுக்கு சென்று பயனடையுமாறு முதன்மை செயலாளர்/ பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கேட்டுக்கொண்டுள்ளார்”.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/671473-chennai-corporation-commissioner-on-covid-19.html