சென்னைக்கு எடுத்து வரப்பட்ட1.2 லட்சம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: மும்பையிலிருந்து மேலும் 1.2 லட்சம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் விமானம் மூலம் சென்னை எடுத்து வரப்பட்டன.

தமிழகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்த வரும் மே 24ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் பொதுமக்களுக்குத் தடுப்பூசிகள் போடுவதைத் தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

ஆனால் மத்திய அரசு தேவையான அளவு தடுப்பூசி மருந்துகளை ஒதுக்காததால், தடுப்பூசிக்கு பல்வேறு மாநிலங்களிலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா 2ஆம் அலை பாதிப்பு தீவிரமாக உள்ளதால் தடுப்பூசி பணிகளை விரைவாக மேற்கொள்ள கூடுதல் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று மத்திய அரசைத் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், நேற்று ஒரு லட்சத்து 20 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகளைத் தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கியது. இந்த மருந்துகள் மும்பையில் உள்ள மத்திய மருந்து தொகுப்பு கிடங்கிலிருந்து இண்டிகோ விமானம் மூலம் சென்னை எடுத்து வரப்பட்டன.

10 பாா்சல்களில் வந்த 290 கிலோ எடையுடைய இந்த 1.2 லட்சம் டோஸ் தடுப்பூசிகளைத் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் பெற்றுக்கொண்டனர்.

அதன்பின்பு, தடுப்பூசிகள் குளிர்சாதன வசதியுடைய வாகனத்தில் ஏற்றப்பட்டு, சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் அலுவலகத்தில் உள்ள மருந்து பாதுகாப்பு அறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த தடுப்பூசி விரைவில் தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்குப் பிரித்து அனுப்பப்படும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

English summary
Amid shortage, Covaxin doses airlifted to Chennai

Source: https://tamil.oneindia.com/news/chennai/1-2-lakhs-covaxin-doses-airlifted-from-mumbai-to-chennai-421099.html