30க்கும் மேற்பட்டோர் மொத்தமாகப் பதிவு செய்தால் நேரில் வந்து தடுப்பூசி: சென்னை மாநகராட்சி அறிவிப்பு – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும் வகையில் 30க்கும் மேற்பட்டோர் ஒரே குடியிருப்பிலோ, நிறுவனத்திலோ, பணியிடங்களிலோ இருந்தாலோ, அல்லது அணி திரட்ட முயன்று அவர்கள் விண்ணப்பித்தாலோ நேரடியாக மாநகராட்சி அதிகாரிகள் வந்து தடுப்பூசி செலுத்தத் தயாராக உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தடுப்பூசி இயக்கத்தை அதிகப்படுத்தும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னையில் தடுப்பூசி இயக்கத்தை அதிகப்படுத்த மண்டல வாரியாக சென்னை மாநகராட்சி முகாம்களை நடத்தி வருகிறது. இதற்காகத் தனியாகத் தளம் ஒன்றையும் பதிவு செய்யத் தொடங்கியுள்ளது.

ஆனாலும், சென்னையில் தடுப்பூசி செலுத்திக்கொள்வோர் எண்ணிக்கை பெரிய அளவில் இல்லை. தமிழகத்தில் ஊரடங்கு அமலான நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ஓரளவு கரோனா தொற்று எண்ணிக்கை குறையும் நிலையில் பரிசோதனைகளை அதிகப்படுத்தவும், தடுப்பூசி எண்ணிக்கை ஒரு நாளைக்கு 3 லட்சம் பேர் என்கிற அளவில் அதிகரிக்கவும் பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர்.

”தடுப்பூசியைப் பொறுத்தவரை 77 லட்சம் வரை வாங்கப்பட்டு 70 லட்சம் பேருக்குப் போடப்பட்டுள்ளது. 7 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. ஆலைத் தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், கடைக்கோடி தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி போட உள்ளோம். மத்திய அரசிடம் ஒன்றரை கோடி தடுப்பூசிகளை வாங்கிப் போடவுள்ளோம்” என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை மாவட்டத்தில் தடுப்பூசி போடும் எண்ணிக்கையை அதிகரிக்க சென்னை மாநகராட்சி முழு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. சென்னையில் நேற்றைய நாள் வரை மொத்தம் 16,99,245 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். நேற்று 11,312 பேருக்கும், மே 15 அன்று 19,776 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தடுப்பூசி போடுவதற்கு பொதுமக்களுக்குத் தயக்கம் வேண்டாம் என அறிவித்துள்ள சென்னை மாநகராட்சி அதிகாரிகள், தடுப்பூசி போடுவதற்கு ஆர்வம் உள்ளவர்கள் பதிவு செய்வதற்காகத் தளம் ஒன்றையும் உருவாக்கியுள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை இணை ஆணையர் ஆல்பி ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வேண்டுகோளாக வைத்துள்ளார்.

“நீங்கள் வசிக்கும் இடத்தில் உங்களால் தடுப்பூசி போட 45 வயதுக்கு மேல் உள்ள 30 பேரை ஒருங்கிணைக்க முடியுமா? ஒரு நிறுவனம், அடுக்குமாடிக் குடியிருப்பு நலச் சங்கம் அல்லது எந்தவொரு குழுவும் 30க்கும் மேற்பட்ட (45 வயதுக்கு மேற்பட்ட) நபர்களை அணி திரட்ட முடிந்தால், தயவுசெய்து இந்தப் படிவத்தை நிரப்பவும். @chennaicorp ஒரு தடுப்பூசி முகாமை அமைத்துத் தரும்” எனத் தெரிவித்துள்ளார்.

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/671862-vaccination-in-person-if-more-than-30-people-register-in-total-chennai-corporation-notice.html