சென்னையைச் சூழ்ந்த கருமேகங்கள்: சென்னை, திருவள்ளூர், காஞ்சி முழுவதும் மழை – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை, புறநகர்ப் பகுதியில் கருமேகங்கள் திடீரென சூழ்ந்து ம்ழை பெய்தது. அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக 6 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில் இன்று மதியம் முதலே சென்னை, அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் மேகம் திரளத் தொடங்கியது. 3 மணிக்கு மேல் திருவள்ளூர் பகுதியில் கருமேகம் சூழ்ந்து பலத்த மழை பெய்தது. பின்னர் படிப்படியாக சென்னையைக் கருமேகங்கள் சூழத் தொடங்கியது.

மாலை 4 மணிக்கே 7 மணி போன்று இருள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது. கடந்த சில நாட்களாக வெயிலின் வெப்பம் காரணமாக சென்னை உள்ளிட்ட புறநகர் மாவட்ட மக்கள், வேலூர் மாவட்ட மக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். இந்நிலையில் மதியத்துக்கு மேல் சென்னையும் அதன் புறநகர் மாவட்டங்களும் குளிர்ந்தன.

அடுத்த 3 மணி நேரத்திற்கு கருமேகங்களால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையமும், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜானும் பதிவிட்டுள்ளனர். இதையடுத்து மாலை 3.30 மணி முதல் சென்னை உள்ளிட்ட புறநகர் மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

நீலகிரியிலிருந்து செங்கல்பட்டு வரை மேகக்கூட்டம் நீண்டிருக்கிறது. சென்னையில் அடுத்த 3 மணி நேரம் கடும் மழை பெய்யும் என எச்சரித்துள்ளதால், சென்னையில் 5 செ.மீ. அளவுக்கு மழை பதிவாகும் எனத் தெரிகிறது.

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/672983-dark-clouds-around-chennai-heavy-rain-over-chennai-tiruvallur-and-kanchi.html