ஊரடங்கை மீறி வெளியே வந்தால் கடும் நடவடிக்கை – சென்னை காவல்துறை எச்சரிக்கை – Samayam Tamil

சென்னைச் செய்திகள்

தமிழகத்தில் நாளை முதல் ஒரு வாரம் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில் இன்று காலை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது, கொரோனா நிவாரண தொகை அனைத்து மக்களுக்கும் முழுமையாக சென்றடைந்ததா என்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்.

காய்கறி, பழங்கள் நடமாடும் வாகனங்கள் மூலம் தடையின்றி கிடைப்பதை உள்ளாட்சித்துறை, வேளாண் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். மருத்துவமனைகளில் ஆக்சிஜன், படுக்கைகள் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதிகார மோதல்கள் இல்லாமல் ஒருங்கிணைந்து செயல்பட்டு கொரோனா எனும் பெருந்தொற்றை வீழ்த்த வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகளை முதல்வர் வழங்கினார்.

நாளை முதல் கடும் கட்டுப்பாடுகள் அமலாகுவதால் முழு ஊரடங்கை கண்காணிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார். மேலும், முழு ஊரடங்கை மீறி வெளியே வருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

சென்னையில் 8 மாத கர்ப்பிணி பெண் மருத்துவர் கொரோனாவுக்கு பலி..!

நாளை முதல் ஒரு வாரத்துக்கு உரிய மருத்துவக் காரணங்கள் மற்றும் இறப்புகளுக்காக மட்டுமே மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவுகள் அனுமதிக்கப்படும் என்றும் மருத்துவ காரணங்களுக்காக மாவட்டத்திற்குள் பயணிக்க இ-பதிவு தேவையில்லை என்றும் தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் 25ஆம் தேதி முதல் தொழிற்சாலை பணியாளர்கள் இரு சக்கர வாகனங்களில் பணிக்கு சென்று வர அனுமதி இல்லை என்று தமிழக அரசு கூறியுள்ளது. மேலும், பணியாளர்களை பணிக்கு அழைத்து வர நான்கு சக்கர வாகனங்களை ஏற்பாடு செய்ய தொழிற்சாலைகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அத்துடன், இ-பதிவு முறையில் வழங்கப்பட்ட பாஸ்களின் அடிப்படையில் நான்கு சக்கர வாகனங்களை காவல்துறையினர் அனுமதிப்பர் என்றும் விளக்கியுள்ளது.

Source: https://tamil.samayam.com/latest-news/state-news/chennai-police-warning-strict-action-if-anyone-come-out-in-violation-of-the-curfew/articleshow/82882213.cms