யாஸ் புயல்: சென்னை சென்டிரல் உள்பட 25 ரெயில் சேவை ரத்து – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

யாஸ் புயலால் சென்னை சென்டிரல் உள்பட 25 ரெயில்களின் சேவையை வரும் 29ந்தேதி வரை கிழக்கு ரெயில்வே ரத்து செய்துள்ளது.

கொல்கத்தா,

கிழக்கு-மத்திய வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.  இது புயலாக மாறி ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் 26ந்தேதி கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

இந்த புயலுக்கு யாஸ் என பெயரிடப்பட்டு உள்ளது.  இந்த புயல் அதிதீவிர புயலாக மாற வாய்ப்பு உள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.  இந்த புயலால் மணிக்கு 165 கி.மீ. முதல் 185 கி.மீ. வரையிலான வேகத்தில் காற்று வீசக்கூடும்.

புயல் தாக்கத்தால் மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  இதனையடுத்து, புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனையில் உள்துறை மந்திரி அமித்ஷா, பல்வேறு மந்திரிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  யாஸ் புயலை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல நகரங்களில் இருந்து செல்லும் ரெயில்களின் சேவையை இன்று முதல் வரும் 29ந்தேதி வரை கிழக்கு ரெயில்வே ரத்து செய்துள்ளது.

இதன்படி, சென்னை சென்டிரலில் இருந்து புறப்பட்டு நியூ ஜல்பைகுரி செல்லும் ரெயில், தாம்பரத்தில் இருந்து நியூ தின்சுகியா செல்லும் ரெயில் ஆகியவை ரத்து செய்யப்பட்டு உள்ளன.

இதேபோன்று, பெங்களூரு, எர்ணாகும், திருவனந்தபுரம், கவுகாத்தி, பூரி, பாட்னா, அகர்தலா ஆகிய நகரங்களில் இருந்து செல்லும் ரெயில்கள் உள்பட 25 ரெயில்களின் சேவையை கிழக்கு ரெயில்வே ரத்து செய்துள்ளது.

Source: https://www.dailythanthi.com/News/India/2021/05/24065640/Yas-storm-25-train-services-including-Chennai-Central.vpf