மெட்ராஸ் ஸ்டேட் தமிழ்நாடு ஆனது எப்படி..? – தகவல் பெட்டகம் #MyVikatan – Vikatan

சென்னைச் செய்திகள்

1962 இல் அண்ணாதுரை அவர்கள் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதுவரை மெட்ராஸ் ஸ்டேட் சட்டமன்றத்திற்குள் மட்டுமே விவாதிக்கப்பட்டு கொண்டிருந்த தமிழ்நாடு பெயர் மாற்ற கோரிக்கை, முதல் முறையாக 1963 இல் மாநிலங்களவையில் (ராஜ்யசபா) மேற்கு வங்கத்தை சேர்ந்த கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பூபேஷ் குப்தா மாநிலங்கள் பெயர் மாற்றம் குறித்த தனிநபர் சட்ட மசோதா ஒன்றை தாக்கல் செய்த போது இது அகில இந்திய அளவில் எடுத்து செல்லப்பட்டது அப்போது மாநிலங்களவையில் உறுப்பினராக இருந்த அறிஞர் அண்ணா அந்த சட்ட மசோதா குறித்து பேசிக்கொண்டிருக்கையில், அவையிலிருந்த சில உறுப்பினர்கள் தமிழ்நாடு என்ற சொல் வரலாற்றில் முன்பு எப்போதும் இல்லை எனவும், அது சேர, சோழ மற்றும் பாண்டிய அரசுகள் என்றுதான் இருந்தது என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு, அண்ணா அவர்கள் தன் பதிலுரையில்,

“வடவேங்கடம், தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல் உலகத்து “

என்ற தொல்காப்பிய வரிகளையும்,

“இமிழ் கடல் வேலியைத் தமிழ்நாடக்கிய”

என்ற இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகார வரிகளையும் மேற்கோள் காட்டி வரலாற்று சான்றுகளின் அடிப்படையில் தமிழ்நாடு பெயர் மாற்ற காரணத்தை அழுத்தமாக எடுத்துரைத்து மாநிலங்களவையில் வாதிட்டார். அதன் பின்னரும் சில உறுப்பினர்கள் தமிழ்நாடு என்று பெயரிடுவதால் என்ன பலனை நீங்கள் அடையப்போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அண்ணா பார்லிமென்ட் என்பதை லோக்சபா என்றும், கவுன்சில் ஆப் ஸ்டேட்ஸ் என்பதை ராஜ்யசபா என்றும், ப்ரெசிடெண்டை ராஷ்டிரபதி என்றும் மாற்றியதனால் என்ன பலனை நீங்கள் அடைந்தீர்கள் என்று தன் பதில் வாதத்தை திடமாக எடுத்துரைத்தார். இந்த கடுமையான விவாதத்திற்கு பிறகும் இந்த சட்ட மசோதா தோற்கடிக்கப்பட்டது.

இதற்கிடையே தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம் குறித்து தமிழரசு கழகம் கட்சின் தலைவர் ம.பொ.சிவஞானம் அவர்கள் உட்பட பல அரசியல் தலைவர்களின் ஆதரவு கிடைத்தது. இதனையடுத்து 1967 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸிடம் இருந்து முதல்முறையாக ஆட்சியை திமுக கைப்பற்றியது. அதன் தலைவர் அண்ணாதுரை அவர்கள் முதல்வராக பொறுப்பேற்று கொண்டார். இதன்பிறகு, 18 ஜூலை 1967 அன்று அறிஞர் அண்ணா தலைமையிலான திமுக அரசு மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்வதற்கான தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டு வந்தது. மேலும், அதை ஆதரித்து “தமிழ்நாடு” என்று மூன்று முறை அண்ணா முழங்க அவையில் இருந்தவர்கள் “வாழ்க” என்று முழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பின், 1968 ஆண்டு நவம்பர் மாதம் அது நாடாளுமன்றத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு அதன் ஒப்புதல் பெறப்பட்டது.

எந்த கோரிக்கைக்காக தியாகி சங்கரலிங்கனார் உயிர் துறந்தாரோ அந்த கோரிக்கை அவர் இறந்து 12 ஆண்டுகள் கழித்து இறுதியாக,14 ஜனவரி 1969 தமிழர் திருநாள் அன்று மெட்ராஸ் ஸ்டேட் தமிழ்நாடாக பெயர் மாற்றம் பெற்று நிறைவேறியது.

க.சேதுராமன்

Source: https://www.vikatan.com/oddities/miscellaneous/how-madras-state-become-tamilnadu