சென்னையில் சுழற்சி முறையில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை: சென்னை மாநகராட்சி அறிவிப்பு – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசு, தனியார் அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் மார்கெட் பகுதிகளில் சுழற்சி முறையில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி நேற்று (ஜூன் 25) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கோவிட் தொற்றினை கட்டுப்படுத்தும் வகையில், பல்வேறு பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (ICMR) அதிக பரிசோதனைகள் மேற்கொண்டு தொற்று பாதித்த நபர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்துதல் அல்லது மருத்துவமனைகளில் அனுமதிப்பதன் மூலம் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் நாள்தோறும் சராசரியாக 25,000 முதல் 30,000 வரை ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் 500 நபர்களுக்கும், காசிமேடு மீன்பிடி துறைமுக வளாகத்தில் 500 நபர்களுக்கும், சிந்தாதரிப்பேட்டை மீன் மார்க்கெட் பகுதியில் 100 நபர்களுக்கும் நாள்தோறும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதன்மூலம், இந்த பகுதிகளில் தொற்று பாதிப்பு பெருமளவு குறைந்துள்ளது

தற்பொழுது சென்னையில் கரோனா தொற்று பெருமளவு குறைந்துள்ள நிலையில், மீண்டும் தொற்று பரவுதலை தடுக்க மாநகராட்சின் சார்பில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகள், உதாரணமாக மார்க்கெட், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், அரசு அறிவித்துள்ள தளர்வுகளுக்கு உட்பட்டு இயங்கும் இதர அங்காடிகள் ஆகிய இடங்களில் பணிபுரியும் நபர்களுக்கு சுழற்சி முறையில் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் செய்ய பெருநகர சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

எனவே, கரோனா வைரஸ் தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மீண்டும் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க மேற்குறிப்பிட்ட ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகளுக்கு மக்கள் தங்களது முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என, பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது”.

இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/686389-chennai-corporation-on-rtpcr-test.html?utm_source=amp&utm_medium=amp_article&utm_campaign=amp_read_more