சென்னை மக்களே எச்சரிக்கை: கரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் கடந்த மே மாதத்தில் கரோனா பாதிப்பு கடும் உச்சத்தை அடைந்து, ஜூன் மாதத்தில் அது மெல்ல குறையத் தொடங்கியது. 

கரோனா உச்சத்தில் இருக்கும் போது பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதும், பாதிப்பு குறைந்து விடுகிறது. அதே வேளையில், பாதிப்பு குறைய குறைய தளர்வுகளும் அறிவிக்கப்படுகிறது.

தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும் மக்கள் வெளியிடங்களுக்கு சுதந்திரமாகச் சென்று வருகிறார்கள். பொதுமுடக்கம் அறிவிக்கப்படும் போது கரோனா தொற்று முற்றிலும் அழிந்து போய்விடுவதில்லை. அது பரவுவதற்கான வாய்ப்பு தான் குறைந்து போகிறது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும் மக்கள் வெளியே வரத் தொடங்கியதும் கரோனா பரவலும் அதிகரித்துவிடும். எனவே சென்னை மக்களே நிச்சயம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது தான்.

அதாவது, கடந்த 22-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சென்னையில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை வெறும் 1,316 ஆக இருந்தது.

சென்னை மாநகராட்சி அன்றைய தினம் வெளியிட்ட கரோனா பாதிப்பு நிலவரப்படி சென்னையில் 1,316 பேர் மட்டும் சிகிச்சை பெற்று வந்தனர். சென்னையில் மொத்த கரோனா பாதிப்பு 5,29,211 ஆகவும், பலி 8,046 ஆகவும் இருந்தது.

அதற்கு முந்தைய நாள் 21-ஆம் தேதி கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 2,262 ஆக இருந்த நிலையில் 22-ஆம் தேதி 1,316 ஆகக் குறைந்திருந்தது.

ஆனால், அந்த நிலை அப்படியே நீடிக்கவில்லை. அடுத்தடுத்த நாள்களில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை உயர்ந்து, 26-ஆம் தேதியான இன்று கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 3,611 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இது 3,530 ஆகவும், அதற்கு முந்தைய நாள் அதாவது வியாழக்கிழமை இது 3,447 ஆகவும் இருந்துள்ளது.

எனவே படிப்படியாக இந்த வாரத்திலேயே ஆயிரத்திலிருந்து கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டிவிட்டதை புள்ளி விவரங்கள் தெள்ளத் தெளிவாகக் காட்டுகின்றன.

சென்னையில் இன்னமும் கரோனா பாதிப்பு குறைந்து கொண்டே இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்காமல், கரோனா உச்சத்தில் இருந்த போது எந்த அளவுக்குக் கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்பட்டதோ அதையே தொடர வேண்டும் என்பதை நிச்சயம் உணரும் நேரம் இது. 

சென்னையில், கடந்த ஜனவரி மாதம் தொற்று எண்ணிக்கை மிகவும் குறைந்து காணப்பட்டது. மொத்தமாக உள்ள 15 மண்டலங்களில் நாளொன்றுக்கு சுமாா் 500-க்கும் குறைவானவா்களே தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனா். இந்நிலையில், உருமாறிய கரோனா பரவல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஏப்ரல் மாதத்தில் உயரத் தொடங்கியது.

இந்த எண்ணிக்கை மே மாத மத்தியில் உச்சத்தை எட்டி, கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளொன்றுக்கு சுமாா் 6 ஆயிரத்தைக் கடந்தது. தொற்றைக் கட்டுப்படுத்த கடந்த மாதம் 10-ஆம் தேதியில் இருந்து அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் சென்னையில் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் குறையத் தொடங்கியது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், கரோனா நோயாளிகள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 

சென்னையில் கரோனா நிலவரம் நிச்சயம் புரிந்திருக்கும். அதீத எச்சரிக்கையும் கவனமும் தேவைப்படும் நேரம் இது.
 

Source: https://www.dinamani.com/tamilnadu/2021/jun/26/people-of-chennai-warn-corona-patients-are-increasing-3649041.html