விதிமுறைகளை கொஞ்சம் கூட மதிக்காத திருமணமண்டபங்கள்.. 80 ஆயிரம் அபராதம் போட்ட சென்னை மாநகராட்சி. – Asianet News Tamil

சென்னைச் செய்திகள்

Chennai, First Published Jun 30, 2021, 10:13 AM IST

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றாத 17 திருமண மண்டபங்களுக்கு 84 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது

கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழகத்தில் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. இதில், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் 50 நபர்கள் கலந்து கொள்ளும் வகையில் ஊரடங்கு உத்தரவில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள உணவகங்கள், திருமண மண்டபங்கள், விருந்து அரங்கங்கள், சமூக நலக்கூடங்கள் ஆகியவற்றில் பதிவு செய்யப்படும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை மாநகராட்சிக்கு இணையதளத்தின் வாயிலாக தெரியப்படுத்த மண்டப உரிமையாளர்களுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டது. 

மேலும், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் நபர்கள் கட்டாயம் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளான முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவற்றை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும், மண்டப உரிமையாளர்களும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்க வேண்டும் என பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. அதன்படி மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட திருமண மண்டபங்களில் நிகழ்ச்சிகள் நடைபெறும்போது மாநகராட்சி வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் மண்டல ஊரடங்கு அமலாக்க குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் அரசின் வழிமுறைகளை பின்பற்றாத திருமண மண்டபங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில்,  அதிகபட்சமாக ராயபுரத்தில் ஒரு திருமண மண்டபத்திற்கு ரூபாய் 30 ஆயிரமும்,  அண்ணாநகரில் 4 திருமண மண்டபங்களுக்கு ரூபாய் 21 ஆயிரமும், மாதவரத்தில் 5 திருமண மண்டபங்களுக்கு ரூபாய் 14,500, அதேபோல் திருவெற்றியூர், வளசரவாக்கம், கோடம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் 17 திருமண  மண்டபங்களில் கொரோனா வழிமுறைகளை உரிய முறையில் பின்பற்றாத காரணத்திற்காக ரூபாய் 84 ஆயிரம் அபராதம் விதித்து சென்ன மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மேலும், கொரோனா காலகட்டத்தில் மாநகராட்சி வருவாய் அலுவலர்கள் மற்றும் மண்டல ஊரடங்கு அமலாக்க குழுவின் மூலம் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட 946 இடங்களில் வழிமுறைகள் முழுமையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Last Updated Jun 30, 2021, 10:13 AM IST

Source: https://tamil.asianetnews.com/politics/wedding-halls-that-do-not-respect-the-rules-chennai-corporation-fined-80-thousand–qvhzta