மெட்ராஸ் ஐஐடி: சாதி பாகுபாடு.. பேராசிரியர் ராஜினாமா; எரிந்த நிலையில் சடலம்! -அடுத்தடுத்து சர்ச்சை – Vikatan

சென்னைச் செய்திகள்

நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் சிறுபான்மையினர், மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொள்வது கடந்த சில வருடங்களில் தொடர் கதையாகி வருகிறது. அதிலும், குறிப்பாக மத்திய கல்வி நிறுவனமான மெட்ராஸ் ஐஐடி-யில் கடந்த சில வருடங்களாகத் தற்கொலை சம்பவங்களும், மாணவர்களின் இடைநிற்றல் எண்ணிக்கையும் அதிகளவில் பதிவாகிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

கல்லூரிக்கு மாணவர்களின் வருகை குறைவாக உள்ளதும், மதிப்பெண் குறைவாக எடுப்பதுமே இத்தகைய தற்கொலைகளுக்கும், படிப்பைப் பாதியில் விட்டுச் செல்வதற்கும் காரணம் என்று ஐஐடி நிர்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்தாலும், மறுபுறம் கல்வியாளர்களும், சமூக செயல்பாட்டாளர்களும் ஐஐடியில் சாதி, மத மற்றும் நிற பாகுபாடு நிலவுவதாகவும், அதனால் ஏற்படும் மன அழுத்தத்தால் தான் மாணவர்கள் பாதியில் நின்று விடுவதாகவும், வேறு வழியே இல்லாமல் தற்கொலை முடிவினை கையிலெடுப்பதாகவும் குற்றசாட்டைகளை முன் வைத்த வண்ணமாக இருந்து வருகின்றனர்.

ஐஐடி மெட்ராஸ் முன்னாள் பேராசிரியை வசந்தா கந்தசாமி

இந்த கூற்றை மெய்ப்பிக்கும் விதமாகவே ஐஐடி மெட்ராஸின் சமீபத்திய செயல்பாடுகள் இருந்து வருகின்றன. முன்னதாக, ஐஐடி மெட்ராஸின் முன்னாள் பேராசிரியை முனைவர் வசந்தா கந்தசாமி சாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் தான் ஐஐடியில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதாகவும், தன்னை விடவும் உயர்ந்த சாதியினர் பணிக்கான போட்டியிலிருந்ததால் தனக்கு வாய்ப்பு வழங்காமல் உயர்ந்த வகுப்பைச் சார்ந்தவர்களுக்குச் சாதியின் அடிப்படையில் ஐஐடி நிர்வாகம் பணி வழங்கியதாகவும் குற்றம்சாட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நெடு நீள சட்டப்போராட்டத்தை நடத்தினார்.

அதில் நீதிமன்றம், மெட்ராஸ் ஐஐடியில் சாதிய பாகுபாட்டிற்கான முகாந்திரம் உள்ளதாகக் கூறி கடுமையாக எச்சரித்திருந்தது. அதைத் தொடர்ந்து, மெட்ராஸ் உள்ளிட்ட இந்தியாவின் பல ஐஐடிகளின் முன்னாள் மாணவர்கள் பலரும் தங்களுக்கு நேர்ந்த சாதி, மத பாகுபாடுகள் மற்றும் பாரபட்சங்கள் குறித்து பொதுவெளியில் பேசத் துவங்கினர். இப்படியாகச் சாதிய சர்ச்சைகளும் புகார்களும் ஐஐடி மெட்ராஸைச் சுற்றிக்கொண்டிருக்க, ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிப் போட்டது கேரளாவைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்திஃப்-ன் தற்கொலை சம்பவம்.

Source: https://www.vikatan.com/government-and-politics/education/iit-madras-assistant-professor-resigns-due-to-caste-discrimination